• Latest News

    Thursday, May 3, 2018

    காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு 2 வாரம் அவகாசம்...!


    காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு 2 வாரம் அவகாசம் கேட்கிறது. இது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

    புதுடெல்லி,

    காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. என்றாலும், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரத்துக்குள் ஏற்படுத்துமாறும் அந்த தீர்ப்பில் உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார கால கெடுவரை அமைதி காத்த மத்திய அரசு, மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் “ஸ்கீம்” என்பதற்கு விளக் கம் கோரியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

    இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் கடத்துவதாக தமிழக அரசு தரப்பில் மத்திய கேபினட் செயலாளர் மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கான மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதேபோல் புதுச்சேரி அரசு கொறடா ஆர்.கே.ஆர் அனந்தராமன் தரப்பில் மத்திய அரசுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தாமதமின்றி அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி புதுச்சேரி அரசு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த நான்கு மனுக்களும் கடந்த மாதம் 9-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டு இருந்ததாவது:-

    கடந்த ஏப்ரல் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வரைவு செயல்திட்டத்தை கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறது.

    இதுதொடர்பாக பல்வேறு நிலைகளில் மத்திய அரசு ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகிறது. சட்ட நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மத்திய அரசின் மூத்த நிர்வாக அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரிடம் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல, மூத்த மந்திரிகளிடமும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த வரைவு செயல் திட்டம் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த வரைவு செயல்திட்டத்தின் இறுதி வடிவத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு மேலும் 2 வாரங்கள் தேவைப்படுகின்றன. அவசரப்பட்டு எடுக்கும் நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் நோக்கத்தை நிறைவு செய்வதாக அமையாது.

    இது தொடர்பான வரைவு செயல்திட்டத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் தேவைப்படுகிறது. எனவே, வருகிற 16-ந் தேதி அல்லது அதற்கு பிறகு இந்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி வழங்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மத்திய அரசு வக்கீல் வாசிம் காதிரி ஆஜர்ஆனார்.

    அப்போது அவர், ‘வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதற்கு மேலும் 2 வாரங்கள் கால அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி இன்றே (நேற்று) விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வருகிற 16-ந் தேதி வரை அவகாசம் வழங்குமாறும்’ கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு நீதிபதிகள், “எப்படி இருந்தாலும் இந்த வழக்கின் மீதான விசாரணை நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த இடைக்கால மனுவை விசாரிக்க முடியாது. உங்களுக்கு என்ன கோரிக்கை இருந்தாலும் நாளை வழக்கு விசாரணையின்போது முன் வைக்கலாம்” என்று கூறி மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு 2 வாரம் அவகாசம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top