• Latest News

  Sunday, June 10, 2018

  உலக கோப்பை போட்டியில் ‘குட்டி தேசம்’...!  4 முறை சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய இத்தாலி, 3 முறை இறுதி சுற்றை எட்டிய நெதர்லாந்து போன்ற அணிகள் இந்த தடவை உலக கோப்பைக்கு போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேற்றப்பட்டது ஒரு பக்கம் பேரதிர்ச்சியாக இருக்கிறது. இன்னொரு புறம் ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு குட்டி தேசம் உலக கோப்பை போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

  அந்த நாட்டின் பெயர் ஐஸ்லாந்து.

  ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து வடக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவில் பனி ஆறுகள் கரைபுரளும் காட்சியை காணலாம். அதனால் அங்கே கடும் குளிர் உடலை வாட்டியெடுத்துவிடும். அவ்வப்போது வெடித்து சிதறும் எரிமலை, நெருப்பை கக்கி, ‘ஐஸ்’லாந்தை அனலாக்கும் நிகழ்வும் நடப்பதுண்டு.

  தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதன் மூலம் ரசிகர்களின் பார்வை ஐஸ்லாந்து மீது திரும்பி இருக்கிறது.

  ஐஸ்லாந்து என்ற இந்த அழகிய தீவு நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 3 லட்சத்து 30 ஆயிரம் தான். அதாவது, சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் ஒரு விசேஷ நாளில் கூடும் மக்களின் எண்ணிக்கையை விட இது மிகவும் குறைவு.

  ஆனாலும் ஐஸ்லாந்தில் கால்பந்து மோகம் முழுமையாக பரந்து விரிந்து கிடக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்த 20 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கால்பந்து கிளப்பில் விளையாட தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.

  5 ஆண்டுகளுக்கு முன்பு உலக தரவரிசையில் 131-வது இடத்தில் இருந்த ஐஸ்லாந்து இப்போது 22-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது என்றால் பாருங்களேன். தகுதி சுற்றில் குரோஷியா, துருக்கி, உக்ரைன் போன்ற பெரிய அணிகளை ஓட, ஓட விரட்டிய ஐஸ்லாந்து தனது பிரிவில் 22 புள்ளிகளுடன் (7 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி) முதலிடத்தை பிடித்தது.

  88 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் பங்கேற்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு ஐஸ்லாந்து தான். ‘டி’ பிரிவில் அர்ஜென்டினா, குரோஷியா, நைஜீரியா ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கும் ஐஸ்லாந்து அணி இன்னும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் 2016-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்தை பதம் பார்த்து கால்இறுதி வரை அந்த அணி முன்னேறியதை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

  தங்கள் நாட்டு அணி வீரர்களை ஊக்கப்படுத்துவதில் ஐஸ்லாந்து ரசிகர்களுக்கு ஈடுஇணை அவர்கள் தான். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது ஏறக்குறைய 33 ஆயிரம் ரசிகர்கள் நேரில் சென்று ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர். இதே அளவு ரசிகர்கள் ரஷியாவுக்கும் படையெடுக்க உள்ளனர்.

  குறைந்த எண்ணிக்கை மக்கள் வசிக்கக்கூடிய ஒரு தேசம் எப்படி, சவால்மிக்க உலக கோப்பைக்குள் நுழைய முடிந்தது என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழுவது இயல்புதான்.

  நமது நாட்டில் ஆக்கி தான் தேசிய விளையாட்டு என்றாலும் கிரிக்கெட் விளையாடவே பலரும் ஆர்வம் காட்டுவதை போன்று, ஐஸ்லாந்தின் தேசிய விளையாட்டு ஹேண்ட்பால் என்றாலும் அங்கு கால்பந்து விளையாடவே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள்.

  அதனால் இளைஞர்கள் பயிற்சி எடுக்க வசதியாக நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட செயற்கை இழையுடன் கூடிய சிறிய கால்பந்து ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் ‘ஜில்’ வானிலையை சமாளிக்க வசதியாக 15 உள்விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு இளசுகள் எளிதில் சென்று பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

  இது தவிர ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் குறைந்தது, 5 பேர் கொண்ட அணிகள் ஆடும் வசதி கொண்ட கால்பந்து ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறந்த வீரர்களை உருவாக்க, நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி கொடுக்கிறார்கள்.

  மேலும் ஐஸ்லாந்து வீரர்கள் ஐரோப்பிய கிளப்புகளில் அதிகமாக விளையாடுகிறார்கள். அந்த அனுபவம் அவர்களின் ஆட்டத்திறனை வளர்ப்பதற்கு தீனி போடுகிறது. தலைமை பயிற்சியாளர் ஹெய்மிர் ஹால்கிரிம்சனும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு எல்லா வகையிலும் வீரர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்.

  இந்த சமயத்தில், 130 கோடிக்கு மேல் மக்கள் தொகையை கொண்ட நம்மால் உலக கோப்பைக்கு தகுதி பெற முடியவில்லையே என்ற ஏக்கமும், ஏமாற்றமும் அனைவரது மனதில் தோன்றும். ஆனால் அதற்கு நாம் இன்னும் மிக நீண்ட காலம் பயணிக்க வேண்டி இருக்கிறது.

  நம்மை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா இந்த முறை உலக கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பதை நினைத்து வேண்டுமானால் இப்போதைக்கு ஆறுதல் தேடிக்கொள்ளலாம்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: உலக கோப்பை போட்டியில் ‘குட்டி தேசம்’...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
  Scroll to Top