• Latest News

  Sunday, July 1, 2018

  உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்...!  லீக் சுற்றில் நைஜீரியா (2-0), அர்ஜென்டினா (3-0), ஐஸ்லாந்து (2-1) ஆகிய அணிகளை புரட்டியெடுத்த குரோஷியா 2-வது சுற்றில் டென்மார்க் அணியுடன் நிஸ்னி நவ்கோராட் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதுகிறது.

  சரியான கலவையில் அமைந்துள்ள குரோஷிய அணியில் கேப்டன் லுகா மோட்ரிச், இவான் ராகிடிச், இவான் பெரிசிச் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள். 1998-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ‘நாக்-அவுட்’ சுற்றை எட்டியுள்ள குரோஷிய அணி இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

  டென்மார்க் அணி, தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கக்கூடிய ஒரு அணியாகும். லீக் சுற்றில் பெருவை (1-0) தோற்கடித்து, ஆஸ்திரேலியா (1-1), பிரான்சுடன்(0-0) டிரா செய்தது. இந்த உலக கோப்பையில் 2-வது சுற்றுக்கு முன்னேறிய அணிகளில் குறைந்த கோல்கள் (2 கோல்) அடித்த அணி டென்மார்க் தான். கடைசியாக ஆடிய 18 சர்வதேச போட்டிகளில் தோல்வி பக்கமே செல்லாத டென்மார்க், குரோஷியாவின் தாக்குதலுக்கு அணைபோடுவதற்கு வியூகங்களை தீட்டி வருகிறது. அதனால் இந்த ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்க்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

  ஸ்பெயினை சமாளிக்குமா ரஷியா?

  உலக கோப்பை கால்பந்து தொடரில், மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கும் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ரஷியாவை எதிர்கொள்கிறது. 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணி லீக் சுற்றில் போர்ச்சுகல்(3-3), மொராக்கோவுடன் (2-2) டிராவும், ஈரானுடன் (1-0) வெற்றியும் கண்டது.

  ‘டிகி-டக்கா’ பாணியில் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விளையாடுவதில் ஸ்பெயினை மிஞ்ச முடியாது. ஆனால் அளவுக்கு அதிகமாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினால் அது ஆபத்தில் முடியும் என்பதையும் உணர்ந்து இருக்கிறார்கள். அதனால் தாக்குதல் பாணியையும் கையாள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை 3 கோல்கள் அடித்துள்ள டியாகோ கோஸ்டா மற்றும் இயாகோ ஆஸ்பாஸ், இனியஸ்டா, செர்ஜியோ ரமோஸ், இஸ்கோ உள்ளிட்டோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக மின்னுகிறார்கள். கடைசியாக ஆடிய 23 சர்வதேச போட்டிகளில் (15 வெற்றி, 8 டிரா) தோல்வியே காணாத ஸ்பெயின் அணி, ரஷியாவையும் போட்டுத்தாக்கி அந்த பயணத்தை கம்பீரமாக தொடர்வதில் ஆர்வமாக இருக்கிறது.

  போட்டியை நடத்தும் ரஷியா முதல் இரு ஆட்டங்களில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதிஅரேபியாவையும், 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தையும் துவம்சம் செய்தது. தங்கள் அணி இந்த அளவுக்கு விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அந்த நாட்டு அதிபர் புதின் வியந்து போய் பாராட்டினார். 

  ஆனால் கடைசி லீக்கில் 0-3 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் உதை வாங்கியது. முதல்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு வந்துள்ள ரஷியாவுக்கு உள்ளூர் ரசிகர்களின் பேராதரவு ஊக்கசக்தியாக இருக்கும். டெனிஸ் செர்ஷிவ், ஆர்டெம் டிஸ்யூபா, அலெக்சாண்டர் கோலோவின் ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. 

  ஆர்டெம் டிஸ்யூபா கூறுகையில், ‘ஸ்பெயின் உயரிய நிலையில் உள்ள ஒரு அணி. அது தான் கால்பந்துக்கு அழகு. ஆனால் குறிப்பிட்ட நாள் சாதகமாக அமைந்தால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். ஸ்பெயின் போன்ற வலுவான அணிக்கு எதிராக சாதிக்க வேண்டும் என்றால் 200-300 சதவீத திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும்’ என்றார். 

  பலம் வாய்ந்த ஸ்பெயினை ரஷியா சமாளிக்குமா? அல்லது மண்டியிடுமா? என்பது இன்று இரவு தெரிந்து விடும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
  Scroll to Top