• Latest News

    Wednesday, August 22, 2018

    ஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் பிரதமர் மால்கம் டர்ன்புல் பதவி தப்பியது...!


    ஆஸ்திரேலிய நாட்டில் மால்கம் டர்ன்புல், 2015–ம் ஆண்டு செப்டம்பர் 15–ந் தேதி முதல் பிரதமராக உள்ளார். இவர் லிபரல் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
    இந்த நிலையில் அங்கு பருவநிலை மாற்றம் தொடர்பான அரசின் கொள்கையில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பருவ நிலை மாற்றம் தொடர்பான தனது முடிவை பிரதமர் மால்கம் டர்ன்புல் கைவிட்டார்.
    இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் அவருக்கு எதிராக அமைந்தது. மேலும் அங்கு குயின்ஸ்லாந்தில் நடந்த ஒரு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியது.
    இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலில் லிபரல் கட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற எண்ணம், கட்சியினர் மத்தியில் உள்ளது. இது மால்கம் டர்ன்புல்லின் பிரதமர் பதவிக்கு சவாலாக அமைந்தது.
    இதையடுத்து நேற்று அவர் கான்பெர்ராவில் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டினார். பிரதமர் பதவி தொடர்பாக அவர் திடீர் ஓட்டெடுப்பு நடத்தினார். இதில் அவரை எதிர்த்து உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் மோதினார்.
    முடிவில் உள்துறை மந்திரி பீட்டர் டட்டனை பிரதமர் மால்கம் டர்ன்புல் 13 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
    மால்கம் டர்ன்புல்லுக்கு 48 ஓட்டுகள் கிடைத்தன. பீட்டர் டட்டனுக்கு 35 ஓட்டுகள் கிடைத்தன.
    இதன் காரணமாக மால்கம் டர்ன்புல்லின் பிரதமர் பதவி தப்பியது.
    அவர் பிரதமர் பதவிக்கு 2015–ம் ஆண்டு செப்டம்பர் 15–ந் தேதி வந்தபோது, இதே போன்று எம்.பி.க்கள் மத்தியில் நடந்த தேர்தலில் அப்போதைய பிரதமர் டோனி அப்போட்டை வீழ்த்தித்தான் வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
    இப்போது தன்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் மீது தனக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை என்றும், அவர் பதவியில் தொடரலாம் என்றும் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறினார்.
    ஆனால் இதை பீட்டர் டட்டன் ஏற்கவில்லை. அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
    இதுபற்றி பீட்டர் டட்டன் கருத்து தெரிவிக்கும்போது, ‘‘ ஓட்டெடுப்பு முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை தொடர்ந்து ஆதரிப்பேன். கட்சிக்கு எனது ஆதரவு உண்டு என்று உறுதி செய்ய விரும்புகிறேன். நாம் அடுத்த தேர்தலில் வென்றாக வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
    லிபரல் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜூலி பி‌ஷப், ‘‘ இந்த ஓட்டெடுப்பின் முடிவு, பிரதமர் மீதான அமோக ஆதரவைத்தான் காட்டுகிறது’’ என்று கூறினார்.
    அதே நேரத்தில் தற்போது தோல்வியைத் தழுவிய பீட்டர் டட்டன் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டதால், இனி பிரதமருக்கு எதிராக தைரியமாக தனது கருத்துகளை வெளிப்படுத்துவார் என கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் பிரதமர் மால்கம் டர்ன்புல் பதவி தப்பியது...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top