• Latest News

    Wednesday, August 22, 2018

    முல்லைப் பெரியாறு அணை கேரள வெள்ள அபாயத்தை அதிகரித்ததா...?


    கேரளா வரலாறு காணாத மழையால் பெரும் வெள்ள சேதத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்தும் முல்லைப் பெரியாறு அணையை முன்பே திறந்திருந்தால் வெள்ளத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
    இந்த விவகாரம் குறித்து முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றியவரும் தமிழக அரசு பொதுப் பணித் துறையின் சிறப்பு தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்றவருமான அ. வீரப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது. அதிலிருந்து,
    கே. முல்லைப் பெரியாறு அணை உண்மையில் பலவீனமாக இருக்கிறதா?
    ப. இல்லை. நிச்சயமாக இல்லை. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற கருத்து 1970களின் பிற்பகுதியிலிருந்து பரப்பப்பட்ட ஒன்று. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க அப்போதைய தமிழக அரசு ஒப்புக்கொண்டு, 1979லிருந்து அந்த அளவுக்கே நீர் தேக்கப்பட்டுவந்தது.
    இதற்குப் பிறகு மூன்று கட்டங்களாக இந்த அணை பலப்படுத்தப்பட்டது. முதலாவதாக, அணையின் அடிப்பகுதியில் ஏற்கனவே உள்ள சுவருக்கு மேலே காங்க்ரீட் கொட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டது. அதற்கடுத்ததாக அணையின் சுவரில் மேலிருந்து கீழாக துளையிட்டு, அணையின் அடிப்பகுதியையும் தாண்டி 40 ஆழத்திற்கு கம்பிகள் பொருத்தப்பட்டு கான்க்ரீட் கொட்டப்பட்டது. இந்த அணை தன்னுடைய எடையால் உறுதியாக நிற்கும் வகையில் கட்டப்பட்ட ஈர்ப்பு விசை அணை என்பதால், அணையின் எடையைக் கூட்டும்விதமாக அணையின் மேல் சுவரில் காங்க்ரீட் தொப்பி அமைக்கப்பட்டது.
    அ. வீரப்பன், முன்னாள் சிறப்புத் தலைமை பொறியாளர், தமிழக அரசின் பொதுப் பணித் துறை
    Image captionஅ. வீரப்பன், முன்னாள் சிறப்புத் தலைமை பொறியாளர், தமிழக அரசின் பொதுப் பணித் துறை
    இதற்குப் பிறகுதான், முன்னாள் நீதியரசர் எஸ். ஆனந்த் தலைமையிலான வல்லுனர் குழு அணை கட்டுமான ரீதியாக, நீரியல் ரீதியாக, நிலநடுக்க ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறது என அறிக்கை அளித்தது. இதற்குப் பிறகுதான் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தலாம் என்றும் பரிந்துரைத்தது. ஆகவே, அணை பலவீனமாக இருக்கிறது என்பது தவறான வாதம். அணையின் நீர்பிடிப்புப் பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் கொடுக்கும் அழுத்தமே இந்த வாதத்தின் அடிப்படை. அணையில் நீர் 152 அடிக்குத் தேங்கினால், அவர்கள் கட்டடங்கள் மூழ்கிவிடும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.
    கே. முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. அப்படி ஒரு அபாயம் இருக்கிறதா?
    ப. நிச்சயம் இல்லை. எங்களுடைய மூத்த பொறியாளர்கள் அமைப்பு முல்லைப் பெரியாறு அணையில் Dam break Analysis எனப்படும் அணை உடைவு ஆய்வை மேற்கொண்டது. அணையின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 152 அடிக்கு உயர்த்தினால் முல்லைப் பெரியாறு அணையில் என்ன நடக்கும், அப்படி 152 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கும்போது அணை உடைந்தால், அதிலிருக்கும் தண்ணீர் என்னவாகும் என்று பார்த்தோம். 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கினால் நிற்கக்கூடிய 10 டிஎம்சி தண்ணீர், 50 கி.மீ. தூரத்தில் உள்ள இடுக்கி அணையைச் சென்றடையும். அந்த அணையின் உயரம் 555 அடி. எனவே யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
    இடுக்கி அணை இந்த ஆண்டுதான் முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. மற்ற நாட்களில் 20 -30 டிஎம்சி தண்ணீர்தான் அங்கே நிற்கும். அதில் போய் இந்த 10.5 டிஎம்சி தண்ணீர் சேர்ந்தால் அதில் எந்த பாதிப்பும் வராது.
    கே. கேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் நீரை 142 அடி அளவுக்கு உயர்த்தியது எந்த அளவுக்கு காரணம் என்று சொல்ல முடியும்?
    ப. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கேரளாவில் இருந்த பெரிய அளவிலான மழைப் பொழிவும் ஆறுகளில் நீர் பெருகியதும்தான் வெள்ளத்திற்குக் காரணம். இந்த வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள இந்த அணை அமைந்திருக்கும் நிலவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
    முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் கீழே அமைந்திருக்கிறது இடுக்கி அணை. முல்லைப் பெரியாறு அணையை கேரளா பக்கமாகத் திறந்தால், அந்த நீர் 50 கி.மீ. தூரம் பள்ளத்தாக்கில் பயணித்து இடுக்கி அணையை அடையும். இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நிரம்புவதற்கு முன்பாகவே இடுக்கி அணை நிறைந்து, திறந்துவிடப்பட்டுவிட்டது. ஆகவே பெரியாறு அணையிலிருந்து நீரைத் திறந்தால் அது கூடுதலான சுமையைத்தான் இடுக்கி அணைக்குத் தந்திருக்கும். முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொண்டால் அது இடுக்கி அணைக்கு இருக்கும் நெருக்கடியை குறைக்கும்.
    முல்லைப் பெரியாறு அணை கேரள வெள்ள அபாயத்தை அதிகரித்ததா?
    தவிர, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீரால் இடுக்கி அணை நிரம்பவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
    கே. பிறகு ஏன் கேரள முதல்வர் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கு குறைக்கும்படி கேட்கிறார்?
    ப. அது சரியான வாதமல்ல. திடீரென முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, திடீரென நிறைய நீரை இடுக்கிக்கு திறந்துவிட்டால் சிக்கலாகிவிடும் என்கிறார் கேரள முதல்வர். ஆனால், இடுக்கி அணையின் நீர் கொள்ளளவு 70 டி.எம்.சி. முல்லைப் பெரியாறு அணையின் மொத்தக் கொள்ளளவே 10.5 டி.எம்.சிதான். அதுவும் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கினால்தான் 10.5 டி.எம்.சி தண்ணீர் அங்கு இருக்கும். நாம் இப்போது தேக்குவது 142 அடிக்குத்தான். ஆகவே அங்கு உள்ள தண்ணீரின் அளவு 7.5 டி.எம்.சி. அணையின் உயரத்தை 136 அடியாகக் குறைத்தால் 6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேங்கும். இப்போது கேரளா 139 அடிக்கு அணையின் உயரத்தைக் குறைக்கச் சொல்கிறது. இது அங்கு தேங்கியிருக்கும் தண்ணீரில் அரை டிஎம்சியை மட்டுமே குறைக்கும். 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு இந்த அரை டிஎம்சி நீர் திடீரெனப் பாய்ந்து அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்க முடியாது. தவிர, ஒருபோதும் தண்ணீரை திடீரென இடுக்கி அணைக்கு திறக்கும் சூழல் ஏற்படாது.
    கே. கேரளா கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முல்லைப் பெரியாறு அணையால் பாசன வசதி பெறும் தமிழகப் பகுதிகள் காய்ந்துபோய் கிடக்கின்றன. இந்த நிலையில், ஏன் கேரள பக்கம் நாம் அதிக நீரைத் திறக்க வேண்டும்?
    ப. முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் (ஷட்டர்கள்) கேரளா பக்கமே அமைந்திருக்கின்றன. தமிழகப் பகுதிக்கு சுரங்கத்தின் மூலமே நீர் எடுக்க முடியும். அப்படி சுரங்கம் மூலம் வினாடிக்கு சாதாரணமாக 1600 கன அடி நீர் மட்டுமே எடுக்க முடியும். அதிகபட்சமாக 2200 கன நீரை சுரங்கம் மூலம் பெறலாம். அந்த நீர்தான் தற்போது வைகை அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த அளவுக்கு மேல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு நீரைப் பெற முடியாது. அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தாண்டும்போது அது வழிந்து இரைச்சல் பாலம் வழியாக வைகை அணையைச் சென்றடையும். இது இரண்டுதான் வழி.
    ஆகவே, அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கும்போது அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டுமென்றால் கேரளா பக்கம் திறப்பதுதான் வழி. ஆனால், முன்பே கூறியபடி அது பெரிய அபாயத்தை ஏற்படுத்தாது.
    கே. நீங்கள் சொல்வதுபோல சுரங்கம் வழியாக நீரை எடுக்க தண்ணீர் மட்டும் உயரும் வரை காத்திருக்க வேண்டுமா? முல்லைப் பெரியாறு அணையின் நீரை முதலில் வைகை அணைக்கு அனுப்பி, அந்த அணையை நிரப்பிவிடலாமே?
    ப. முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, 104 அடிக்கு மேல் உள்ள நீரைத்தான் பயன்படுத்த முடியும். அந்த உயரத்தில்தான் சுரங்கம் அமைந்திருக்கிறது. அதற்குக் கீழே உள்ள நீர், dead storageதான். ஆகவே முன்கூட்டியே வைகைக்கு நீரை அனுப்பியிருக்க வேண்டும் என்பது சரியான வாதமல்ல.
    முல்லைப் பெரியாறு அணை கேரள வெள்ள அபாயத்தை அதிகரித்ததா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
    கே. முல்லைப் பெரியாறு அணையின் நீரை நேரடியாக பாசனப் பகுதிகளுக்கு அனுப்ப முடியாதா?
    ப. வைகை அணை கட்டுவதற்கு முன்பாக, சுரங்கம் வழியாக வரும் நீர் பி.எஸ். பட்டியைச் சென்றடைந்து பாசனக் கால்வாய்களுடன் இணையும். ஆனால், வைகை அணை கட்டிய பிறகு, அணைக்குச் சென்றுதான் பாசனப் பகுதிகளை அடையும்.
    கே. தற்போதைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உச்ச நீதிமன்றம் அனுமதித்தபடி 152 அடிக்கு உயர்த்த முடியுமா?
    ப. முதலில் பேபி அணையை முழுமையாக பலப்படுத்திய பிறகு, படிப்படியாக நீர் மட்டத்தை உயர்த்த முடியும். ஆனால், அதற்கு கேரள அரசுடன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். தமிழக அரசு எந்த அளவுக்கு அதில் முனைப்பாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முல்லைப் பெரியாறு அணை கேரள வெள்ள அபாயத்தை அதிகரித்ததா...? Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top