• Latest News

  Saturday, September 19, 2020

  ஜப்பானின் பிரதமராக ஏழை விவசாயியின் மகன்..!  அதுவொரு அழகான தேவதைக் கதையைப் போன்று தான் நடந்தது. ஒரு குக்கிராமம். அதில் விவசாயக் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஆட்சி அதிகாரத்தின் உச்சபீடத்தில் அமர்ந்தார் என்ற கதை. ஜப்பானின் பிரதமராகத் தெரிவான யொஷிஹிதே சுகாவின் கதை அந்நாட்டில் நீண்டகாலம் பிரதமராக கடமையாற்றிய ஷின்ஸோ அபேயின் வலது கரமாக இருந்தவர். அமைச்சரவையின் செயலாளர். அரசாங்கத்தின் பேச்சாளர் என்று தான் ஜப்பானிய மக்கள் யொஷிஹிதேயை அறிந்திருந்தார்கள்.

  பத்திரிகையாளர்கள் அவரை இன்னொரு நரசிம்மராவ் என்பார்கள். சிரிக்க மாட்டார். துமக்குப் பிடிக்காத கேள்விகள் கேட்டால் கோபம் வரும். ஆனால், காரியக்காரர். ஷின்ஸோ அபே என்ன நினைக்கிறாரோ, அதனை சரியாக செய்து முடிப்பதில் வல்லவர்.


  தமக்கு சுகவீனம் எனக்கூறி. ஷின்ஸோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சி யொஷிஹிதேயை தலைவராகத் தெரிவு செய்தது. ஜப்பானின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பின் பிரகாரம், ஆளும் கட்சியின் தலைவர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார். அவ்வாறே, கடந்த வாரம் 71 வயதுடைய யொஷிஹிதே பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார்.

  அரசியல் பின்புலத்தின் அடிப்படையில் ஷின்ஸோ அபேயையும், யொஷிஹிதே சுகாவையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவிற்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஜப்பானின் வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றியவரின் மகன், ஷின்சோ அபே. அவரது தாத்தாவும் பிரதமராக பணிபுரிந்தவர்.

  ஜப்பானின் வடக்கில் ஸ்ட்ரோபெரி பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயின் மகனான யொஷிஹிதே, தமது 18ஆவது வயதில் ரோக்கியோவிற்கு வந்தவர். ஒரு கடதாசித் தொழிற்சாலையில் வேலை செய்தவர். அதன்மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து கல்வி கற்றவர்.

  அரசியலில் கால் பதித்து தமது சொந்த முயற்சியால் படிப்படியாக உயர்ந்து, அபேயின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அரசியல்வாதியாக கடமைகளை நிறைவேற்றினார். அவரது கடுமையும், ஒழுக்கமும் பிரசித்தி பெற்றவை. ஒழுங்காக வேலை செய்பவர்களுக்கு நான் நல்லவன் என்பார்.

  அதிகாலை ஐந்து மணிக்கு எழுவார். கடுமையான உடற்பயிற்சி செய்வார். ஒன்றரை மணித்தியாலங்களுக்குள் வேலைகளைத் தொடங்கி விடுவார். இதெல்லாம் சிறப்பான விடயம் என ஆட்சி நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் பாராட்டுவார்கள். ஜப்பானின் ஆட்சி நிர்வாக முறையில் உள்ள சிக்கல்கள் யொஷிஹிதேயிற்கு அத்துப்படி கடந்த ஆண்டு ஜப்பானிய பேரரசர் அக்கிஹிட்டோ முடி துறந்து. மன்னராட்சியின் புதிய யுகம் ஆரம்பிக்கப்பட்ட சமயம், அந்த நிலைமாற்றத்தை அரசாங்கத்தின் பேச்சாளராக அவர் சிறப்பாக கையாண்டதாக விமர்சகர்கள் கூறுவார்கள் அவரது ஆற்றலையும், அர்ப்பணிப்பையும் கருத்திற்கொண்டு தான், ஆளும் கட்சி அவரைத் தலைவராகத் தெரிவு செய்ததா என்ற கேள்வி எழலாம்.

  அது முக்கியமான கேள்வி. உன்னிப்பாக ஆராய்ந்தால், ஒப்புக்கு சப்பாணியாகவே அவர் பிரதமர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அறியலாம். உண்மையில் சொல்லப் போனால், ஜப்பானிய தேசம் மிகவும் இக்கட்டான காலகட்டத்தை கடக்கிறது. இன்னொரு வருடத்தில் தேர்தலை எதிர்கொள்கிறது.

  தேர்தல் வரை ஆட்சி நிர்வாகத்தை முன்கொண்டு செல்வதற்கு பொருத்தமான எவரும் கிடைக்காத நிலையில், யொஷிஹிதே பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எனலாம். முன்னைய பிரதமர் ஷின்ஸோ அபே, ஜப்பானில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படக் காரணமாக இருந்தார் என்பது உண்மையே. இருந்தபோதிலும், கொவிட்-19 நெருக்கடியை அவர் எதிர்கொண்ட விதம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடி பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

  தாம் இனிமேலும் பிரதமர் பதவியை வகித்தால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சிக்குத் தோல்வி தானென்பதை ஷின்ஸோ அபே உணர்ந்திருக்கிறார். அது தான் 'நைஸாக' பதவி விலகி, ஆட்சி நிர்வாகப் பொறுப்பை யொஷிஹிதேயிடம் ஒப்படைக்க காய் நகர்த்தியிருக்கிறார் என்பது வெளிப்படை.

  லிபரல் ஜனநாயகக் கட்சி என்பது பலம்பொருந்திய அரசியல் சக்தி. அதன் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு திறமைகளுக்கு அப்பால், சிறப்பான குடும்பப் பின்னணியும் இருக்க வேண்டும். கட்சிக்குள் இருக்கும் பல குழுக்களில் ஏதேனுமொரு குழுவின் ஆதரவு இருப்பதும் அவசியம்.

  யொஷிஹிதேயிற்கு அத்தகைய பின்புலமும் கிடையாது. அவர் எந்தக் குழுவை சார்ந்தவரும் அல்லர். இன்று ஷின்ஸோ அபேயிற்கு மாற்றீடாக அமையக்கூடிய அரசியல் தலைவர் ஒருவர் இல்லாத காரணத்தால், கட்சியின் முக்கியஸ்தர்கள் யொஷிஹிதேயைத் தெரிவு செய்திருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர் பேராசிரியர் கொய்ச்சி நக்கானோ கூறுகிறார்.

  இதிலொரு சூட்சுமம் இருக்கிறது. இது தேர்தலுடன் தொடர்புடையது. அடுத்த ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால், லிபரல் கட்சியின் சார்பில் மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய குணாதிசயங்கள் கொண்ட வேட்பாளரை நிறுத்துவது அவசியம்.

  ஆனால், யொஷிஹிதேயிடம் அத்தகைய குணநலன்கள் கிடையாது. அவர் சிறப்பான பேச்சாளரும் அல்லர். மற்றபடி, ஒரு அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய படோபடங்களோ, போலிச் சிரிப்போ, கூழைக் கும்பிடுகளோ அறியாதவர். ஷின்சோ அபேயைப் போன்ற இராஜதந்திர ஆற்றல்களும் தமக்கில்லை என்பதை யொஷிஹிதே வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

  ஆட்சி நிர்வாகம் என்ற கப்பல் கொவிட்-19 என்ற புயலைக் கடக்கும் தருணத்தில், அதனைத் தற்காலிகமாக செலுத்த மாலுமியொருவர் தேவை. கப்பல் புயலைக் கடந்த பின்னர். வேறொரு தலைமை மாலுமியைத் தேடிக்கொள்ள முடியும் என்ற சிந்தனையின் அடிப்படையில் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் யொஷிஹிதேயிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்துள்ளதாகத் தோன்றுகிறது.

  பெரும்பாலும் செல்வாக்கு மிக்க குடும்பப் பரம்பரையைக் கொண்டவர்கள் அலங்கரித்த நாற்காலியில் ஒரு ஏழை விவசாயியின் மகன் அமர்த்தப்பட்டுள்ளார்.

  அவர் ஒருவருடகாலத்திற்குள் தம் திறமைகளை நிரூபித்து மக்கள் மனங்கவர்ந்தவராக தம்மை மாற்றிக் கொள்ள முடியுமானால், அந்த நாற்காலியில் தொடர்ந்தும் அமர்ந்திருக்கலாம்.

  அதற்கு பல சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும். உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் வரையப்பட்ட அரசியல் யாப்பைத் திருத்தி, சுயபாதுகாப்புப் படையணிக்கு அங்கீகாரம் அளிப்பது, தமது முன்னோடி ஷின்ஸோ அபே அமெரிக்காவுடன் பேணிய நட்புறவை மாறாமல் தொடர்வது, பிராந்திய நாடுகள் மத்தியில் உறவுச் சமநிலையை ஏற்படுத்துவது, பின்போடப்பட்ட ரோக்கியோ ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்தி முடிப்பது என எத்தனையோ சவால்கள்.

  எனினும், கொவிட்-19 நெருக்கடியையும், அதன்மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவையும் சிறப்பாக சமாளித்தல் என்ற சவால் தான் முதன்மையானது.

  அதனை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதில் தான், சக்கரவர்த்திகளின் தேசத்தில் விவசாயியின் மகன் எந்தளவுக்கு சாதிக்கிறார் என்பதும் தங்கியிருக்கிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: ஜப்பானின் பிரதமராக ஏழை விவசாயியின் மகன்..! Rating: 5 Reviewed By: STAR FM
  Scroll to Top