சிரியா குறித்த ஐ.நா. விசாரணைப் பொறிமுறை...!
சிரிய விவகாரம்
2011ஆம் ஆண்டு தொடக்கம் சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், பாரிய மனிதப் படுகொலைகள் என்பன சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அண்மைக்கால வரலாற்றில் மிகமோசமான பேரழிவுகள் இடம்பெற்ற தேசமாக சிரியாவைக் குறிப்பிடலாம். பழைமை வாய்ந்ததும், அழகுற வடிவமைக்கப்பட்டதுமான நகரக் கட்டுமானங்களைக் கொண்ட சிரியாவில், உள்நாட்டுப் போர் மிகமோசமான பேரழிவை ஏற்படுத்தியது.
இந்தப் போரின் தாக்கம், பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் சர்வதேச கவனத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது.
சிரியாவில் மூன்று தரப்புகள் சண்டையிட்டன. ஒன்று சிரிய ஜனாதிபதி அசாத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரச படைகள். அதற்கு ரஷ்யாவின் முழு ஆதரவு இருந்தது, இப்போதும் இருக்கிறது. இரண்டாவது, ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள். மூன்றாவது, சிரியப் படைகளையும், ஐ.எஸ் அமைப்பையும் எதிர்த்துப் போராடிய உள்ளூர் போராளிக் குழுக்கள், குர்திஷ் போராளிகளைக் கொண்ட கூட்டணி. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோவின் ஆதரவு இருந்தது.
இந்த முத்தரப்பு மோதல்களுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித பேரவலமாக இது பார்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளின் கவனம் இருந்தபோதும், சர்வதேச கவனத்தை ஈர்த்தபோதும், சிரியாவில் இடம்பெற்ற மீறல்கள் விடயத்தில் ஐ.நா.வின் நேரடித் தலையீடு சாத்தியமற்றதாகவே இன்னமும் இருக்கிறது.
அதற்குக் காரணம், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கத் தரப்பு கொண்டு வரும் தீர்மானங்களை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரங்களினால் தடுக்கும் சூழல் காணப்பட்டது. இதனால், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அனுமதியுடன் எந்தவொரு நேரடி தலையீடுகளை மேற்கொள்ளவோ, விசாரணைப் பொறிமுறைகளை உருவாக்கவோ முடியாது போனது.
அதனால் தான், ஐ.நா. பொதுச்சபையின் ஊடாக ஒரு பொறிமுறையை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட 71/248, தீர்மானத்தின் மூலமாக, சர்வதேச சட்டங்களுக்கமைய மிக மோசமான குற்றங்களுக்குப் பொறுப்பான நபர்களை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் உதவுவதற்காக, பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டது.
இதுவே, சர்வதே பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான பொறிமுறை (International, Impartial and Independent Mechanism). இது சுருக்கமாக IIIM என்று அழைக்கப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபைக் தீர்மானத்தின் 4 ஆவது பந்தியில் பொறிமுறை தொடர்பான ஆணை பற்றி கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியனவே இந்த IIIM பொறிமுறையின் பிரதான இலக்காகும்.
அத்துடன் இந்தப் பொறிமுறையின் மூலம், நியாயமான மற்றும் சுதந்திரமான குற்றவியல் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும் விரைவுபடுத்துவதற்குமான கோப்புகளைத் தயாரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சட்டங்களுக்கு அமைய, எதிர்காலத்தில் உருவாக்கப்படும் தேசிய, பிராந்திய அல்லது சர்வதேச நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில், பயன்படுத்துவதற்காக சர்வதேச சட்டத்தின் படி இந்த குற்றங்கள் குறித்து ஆவணப்படுத்தும் அதிகாரம் இந்த பொறிமுறைக்கு உள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது.
இந்த பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான ஆணையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விடயம், IIIM ஒரு வழக்குத்தொடுனர் அலுவலகமோ அல்லது நீதிமன்றமோ அல்ல என்பதாகும்.
அதாவது, சிரியாவில் இடம்பெற்ற குற்றங்கள், மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட நடவடிக்கைகளை எடுக்கும், அல்லது யாரையாவது சட்டத்தின் முன்நிறுத்தும், அல்லது தண்டிக்கும் பொறிமுறை அல்ல என்பதே இதன் அர்த்தமாகும். அவ்வாறாயின் இந்தப் பொறிமுறை எதற்காக அமைக்கப்பட வேண்டும் ஏன் அமைக்கப்பட்டிருக்கிறது என்று இதற்கு வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சர்வதேச குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்து, பகுப்பாய்வு செய்து எதிர்காலத்தில், இந்தக் குற்றங்கள் தொடர்பாக, விசாரிக்கும் சட்ட அதிகாரம் பெற்ற, தேசிய, பிராந்திய அல்லது சர்வதேச நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆவணப்படுத்துவது தான் இந்த பொறிமுறையில் இலக்கு.
இதன் மூலம், 2011 மார்ச் தொடக்கம், சிரியாவில் இடம்பெறும், மோசமான சர்வதேச குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறைகளை இந்த IIIM பொறிமுறை ஆதரிக்கிறது. இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இந்தப் பொறிமுறை உருவாக்கப்பட்டு, 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், சிரியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்கும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதே அது.
அங்கு நடந்த மீறல்கள் பற்றி தகவல்கள், ஆதாரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் தான், இன்னமும் ஐ.நா. பொறிமுறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பொறிமுறை ஐ.நா.வின் அனுபவம் மிக்க அதிகாரிகளின் தலைமையிலேயே இயங்குகிறது. இந்த பொறிமுறை சுதந்திரமானது. இதற்கும், சிரியாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிரியாவின் ஒப்புதல் பெறப்படவும் இல்லை.
ஏற்கனவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, உருவாக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைகள் எவ்வாறு இடம்பெற்றனவோ, அவ்வாறு தான், இந்த விசாரணைகளும், இடம்பெறுகின்றன.
அந்த விசாரணைக்கும் இலங்கை அரசாங்கம் இணங்கவில்லை. இலங்கையிலும் விசாரணைக்கு அனுமதிக்கப்படவில்லை. வெளியில் தான் விசாரணைகள் இடம்பெற்றன. எனினும் இலங்கையின் சார்பில் அப்போது ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வாறு தான் ஐ.நா.வின் IIIM பொறிமுறையும் சிரியாவுக்கு வெளியில் இருந்தே இயங்குகிறது.
ஐ.நா.சார்பில் குற்றவியல் சட்டம், நாடு கடந்த நீதி மற்றும் மனித உரிமை துறைகளில், ஈடுபட்டு வரும், நீதித்துறை மற்றும் பொதுச் சேவைகளில் 27 ஆண்டுகள் அனுபவம் மிக்க மார்சி உஹெல் என்ற பெண் அதிகாரியே இந்த பொறிமுறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரான்சில் நீதிபதியாகவும், கொசோவோவில் ஐ.நா.வின் இடைக்கால நிர்வாகத்திலும், முன்னாள் யூகோஸ்லாவியாவில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை சட்ட ஆலாசகர் மற்றும் தலைவராகவும், கம்போடியாவில் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்திலும், பணியாற்றியவர்.
இந்த பொறிமுறையின் பிரதி தலைவராக, ஜார்விஸ் ருக் என்ற பெண் அதிகாரி 2017 டிசெம்பரில் நியமிக்கப்பட்டார். இவரும், சர்வதேச குற்றவியல் நீதி தொடர்பான துறையில் 17 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். முன்னாள் யூகோஸ்லாவிய தொடர்பான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் பிரதி வழக்குத்தொடுனராகவும் பணியாற்றியவர்.
போர்க்குற்றங்கள், பாலியல் குற்றங்கள் சார்ந்த சர்வதேச குற்றவியல் நீதித்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். இவர்களுக்குக் கீழ் தான் சிரியாவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான தகவல்கள், ஆதாரங்களைத் திரட்டும் பணிகளை ஐ.நா.வின் IIIM பொறிமுறை முன்னெடுத்து வருகிறது.
இந்த பொறிமுறை, போர்க்குற்றங்கள் தொடர்பாக தனிநபர்கள், நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், மற்றும் சிவில் அமைப்புகளிடம் இருந்து தகவல்கள், ஆதாரங்களைத் திரட்டி வருகிறது. 2011இல் இருந்து சிரியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பாக, மிகவும் விரிவான முறையில் தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்துகிறது.
சிரியாவில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் அவற்றுக்குக் காரணமானவர்கள் எனக் கூறப்படுபவர்கள் பற்றிய புரிதலுக்கு இவர்களின் பணி முக்கியமானது.
இந்த பொறிமுறை, ஏனைய அமைப்புகள், நிறுவனங்களின் நம்பிக்கையையும், உறவுகளையும் ஏற்படுத்த கடுமையாக போராட வேண்டியுள்ளது. ஏனென்றால், எதிர்காலத்தில் இந்தப் பொறிமுறையின் பணியை விரிவுபடுத்த அது அவசியமானது. தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் செயல்முறையின் மூலம் தான், எதிர்கால பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக, குற்றங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து முழுமையான மற்றும் நுணுக்கமான புரிதலை கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.
இந்த பொறிமுறைக்கான நிதி ஐ.நா.வின் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் தான், சிரியா தொடர்பான IIIM பொறிமுறை இயங்குகிறது. அடுத்த வாரம், மியான்மார் தொடர்பான, IIMM பொறிமுறை எவ்வாறு உருவாக்கப்பட்டது. எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம்.
Share From_Veerakesari.lk
No comments