Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜும்ஆ தினத்தின் மகத்துவம்...


முஸ்லிம்களுக்கு மிகவும் சிறப்புக்குரிய நாட்களில் ஒன்றாக வெள்ளிக்கிழமை விளங்குகிறது. இது ஜூம்ஆ நாளாகும். இருந்தும் இந்நாளின் சிறப்பையும் மகத்துவத்தையும் அறிந்து கொள்ளாதவர்களாக பெரும்பாலானவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்நாளின் சிறப்பையும் மகத்துவத்தையும் அறிந்து செயற்படுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை உயிர்ப்பிப்பதாக அமையும்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமைகளில் நேர காலத்துடன் ஜும்ஆ தொழுகைக்கு செல்வது சிறந்த அமலாகும். அதேநேரம் எவர் ஒருவரும் நிர்ப்பந்த காரணம் இன்றி ஜூம்ஆ தொழுகையை விடுவது குற்றமாகும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'மக்கள் ஜும்ஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும் அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான். பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்து விடுவர்' என்றுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்நபிமொழியின் ஊடாக ஜும்ஆ தொழுகையின் அவசியமும் முக்கியத்துவமும் தெளிவாக எடுத்தியம்பப்பட்டுள்ளது. அதனால் அந்த பயங்கர நிலையைத் தவிர்த்துக் கொள்வதில் தான் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் ஜூம்ஆ தொழுகையை ஜமாத்தாகத் தொழும் போது இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். மிகவும் நிர்பந்த சூழ்நிலை காரணமாக ஜூம்ஆ தொழுகையை ஜமாத்தாகத் தொழ முடியவில்லையாயின் ளுஹர் தொழுகையை நான்கு ரக்அத்துகளாகத் தொழ வேண்டும். அதே போன்று தான் ளுஹருடைய முன் பின் சுன்னத்துகளையும் தொழ வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் ஜூம்ஆ நாளில் மஸ்ஜித்துக்கு விரைவாக வந்து விட்டால் இமாம் சொற்பொழிவு அல்லது குத்பாவை ஆரம்பம் செய்வதற்கு முன்பு வரை இரண்டிரண்டாக நபில் தொழுகையில் ஈடுபடலாம். இமாம் உரையை ஆரம்பம் செய்துவிட்டால் பள்ளிவாசலுக்கு காணிக்கை (தஹிய்யத்துல் மஸ்ஜித்) தொழுகையை இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ள வேண்டும். இத்தொழுகையை நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு மனிதர் வந்து தொழாமல் அமர்ந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், 'இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டீரா?' என்று வினவ, அவர் 'இல்லை' என்றார். 'அவ்வாறாயின் தொழுவீராக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

ஜும்ஆ நாளின் சிறப்பு குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். ' ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (ஆதாரம்: புஹாரி)

இது எவ்வளவு பெரிய பாக்கியம். அந்தப் பாக்கியத்தை அடைந்து கொள்வதை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். அத்தோடு ஜூம்ஆ தொழுகை முடிந்த பின்பு திக்ர் செய்ய வேண்டும். அதன் பின்பு நேரமிருப்பின் ஜூம்ஆ உடைய பின் சுன்னத் நான்கு ரக்அத்துகளை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். (ஆதாரம்: முஸ்லிம்)

இல்லையெனில் குறைந்தது இரண்டு ரக்அத் பின் சுன்னத் தொழுது விட்டு வீட்டிற்கு சென்று மீதம் உள்ள இரண்டு ரக்அத்தைத் தொழுது கொள்ள வேண்டும். (ஆதாரம்: முஸ்லிம்). அவசர தேவையாயின் ஜூம்ஆ தொழுகை தொழுத பின்பு வீட்டிற்கு சென்று ஜூம்ஆ உடைய பின் சுன்னத்தை இரண்டிரண்டாக தொழுது கொள்ளலாம். (ஆதாரம்: முஸ்லிம்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதேவேளை ஆண்கள் பள்ளிவாசலுக்கு சென்று ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது கடமையான போதிலும் பெண்களுக்கு அது கடமையில்லை. அதில் அவர்களுக்கு விதி விலக்கு உண்டு. இது குறித்து நபி (ஸல்) அவர்கள், 'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்றும், (ஆதாரம்: அபூதாவூத்) பெண்களுக்கு ஜூம்ஆ தொழுகை கடமை இல்லை.

ஆனால் தொழ விரும்பினால் அவர்கள் பள்ளிக்கு சென்று ஆண்களுக்கு பின்னால் நின்று ஜூம்ஆ தொழலாம் (ஆதாரம்: முஸ்லிம்) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பெண்கள் வீட்டில் ஜூம்ஆவிற்கு பதில் லுஹர் தொழுவதாக இருந்தால் நான்கு ரக்ஆத்கள் தொழ வேண்டும். அதே போன்று ளுஹருடைய முன் மற்றும் பின் சுன்னத்கள் சுன்னத்களையும் தொழலாம். ஜூம்ஆக்கான அதான் கூறப்பட்டு விட்டால் பெண்கள் வீட்டில் ளுஹர் தொழ ஆரம்பிக்கலாம். ஆண்கள் ஜும்ஆ தொழுது முடிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.

அப்துல்லாஹ்

Post a Comment

0 Comments