Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஹிஜ்ரி ஆண்டு முறைமை எவ்வாறு உருவானது?


ஆண்டுகளின் கணிப்பீடு முக்கிய நிகழ்வுகளை கவனத்தில் கொண்டு தான் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர்.

அதுவே கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்), கி.மு.(கிறிஸ்து பிறப்புக்கு முன்) எனப்படுகிறது. இந்நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில் இஸ்லாமியர்கள் ஹிஜ்ரி ஆண்டைக் கடைபிடிக்கின்றனர். இது முஸ்லிம்கள் கடைபிடிக்கும் வருடமுறைமையாகும். இந்த ஹிஜ்ரி ஆண்டின் இவ்வருட முதல் மாதமான முஹர்ரம் ஆரம்பமாகவிருக்கும் தற்போதைய சூழலில் இம்முறைமை எவ்வாறு உருவானது என்பதை அறிந்து கொள்வது பயன்மிக்கதாக இருக்கும். இந்த ஹிஜ்ரி வருட முறைமை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் காணப்படவில்லை. ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.

அதாவது நபி (ஸல்) அவர்களது காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானை படையுடன் கஃபதுல்லாஹ்வை அழிக்க வந்த போது அல்லாஹ், பறவைகள் மூலம் அப்படையை முறியடித்தான். இது தொடர்பில் அல் குர்ஆனின் 105வது அத்தியாயம் குறிப்பிடுகிறது. இவ்வத்தியாயமே ஃபீல் - யானை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இச்சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

'நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்' என்று கைஸ் பின் மக்ரமா (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: திர்மிதீ, அஹ்மத்)

இதன்படி நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்டுக் கணிப்பீடு, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப்பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லீல் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது முஃளல் என்ற வகையைச் சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுட்டுள்ளார்கள். (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த கலீபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு முறை பயன்படுத்தப்படவில்லை. உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு முறை ஆரம்பமானது. அன்று இந்த இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிப்பது என்பது தொடர்பில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் காணப்பட்டன. 1. நபிகளாரின் பிறப்பு, 2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு, 3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு, 4. நபிகளாரின் இறப்பு.

இதில் நபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்கள்? எப்போது இறைத் தூதரானார்கள்? என்பதில் கருத்து வேறுபாடு காணப்பட்டதால் இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. நபிகளார் இறந்த ஆண்டு அவர்களை கவலைக்கு உள்ளாக்கியதால் அதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக இருந்த ஹிஜ்ரத் செய்த ஆண்டைத் தேர்வு செய்தார்கள். (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வயதிலிருந்தோ அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள். (ஆதாரம்: புகாரி)

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் தான் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

அபூமூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'உங்களிடமிருந்து கடிதம் வருகிறது. ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லை' என்று கூறியிருந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள் என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து ஆரம்பிக்கலாம்?' என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள். (ஆதாரம்: ஹாகிம்)

- அபு முஷீரா -

Post a Comment

0 Comments