Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

குர்ஆனை அணுகும் முறை...!


இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தனது 'இஹ்யா உலுமுத்தீன்' என்ற நூலில் இறைநேசர் ஒருவரின் சம்பவமொன்றை குறிப்பிட்டுள்ளார்கள்.

அதாவது குறித்த இறைநேசர், 'எல்லோரையும் போன்று நானும் முதலில் குர்ஆனைப் படித்தேன். அதில் எனக்கு ஓரளவு இன்பமும் சுவையும் கிடைக்கப்பெற்றது. பிறகு இக்குர்ஆனை நபி (ஸல்) அவர்களே 'எனக்கு முன் அமர்ந்து வாசிக்க நான் அதை செவியேற்கிறேன்' என்ற உணர்வோடு வாசித்தேன். அப்போது நான் பெற்ற இன்பம் இரட்டிப்பானது. 

அதன் பின்னர் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், 'எனக்கு முன்னால் அருள்மறையை வாசிக்கிறார்' என்ற உணர்வோடு குர்ஆனை ஓதினேன். அச்சமயம் நான் பெற்ற இன்பம் மேலும் பன்மடங்காகியது.

அதற்கடுத்தபடியாக, 'அல்லாஹ் என்னுடன் உரையாடுகிறான்' என்ற உணர்வோடு குர்ஆனை ஓதினேன். அப்போது மாபெரும் அற்புதம் நிறைந்த குர்ஆனை ஓதுகின்ற சுவை பன்மடங்கு அதிகரித்து மெய்சிலிர்த்து பூரித்துப்போனேன்' என்றுள்ளார். அல்லாஹ் நமக்காகத்தான் அல் குர்ஆனை அருளியுள்ளதாகத் திரும்பத்திரும்ப கூறுகிறான். 

அவன் நம்மை அழைக்கிறான். நம்மோடு அளவளாவுகிறான். அதனால் அவனது பேச்சை, அவனது சொற்களை கேட்டுணர்வதற்காக தினமும் சில நிமிடங்களாவது குர்ஆனை ஓத வேண்டும். அப்போது அல்லாஹ் நாடினால் நம் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடும்.

நாளுக்கு மூன்று வசனங்கள், ஐந்து வசனங்கள் என்றபடி தொடர்ந்து ஓதி குர்ஆனை விளங்கினால் முழு குர்ஆனையும் ஓதி விளங்கிடலாம். நமது வாழ்வில் பொழிகின்ற அருள் வளமும் மாற்றமும் அளவிற்கரியதாகவும் இருக்கும்.

மேலும் எமது சுயமதிப்பீட்டுக்காக இரவிலோ அதிகாலையிலோ சில நிமிடங்களை நாம் ஒதுக்கிக் கொள்ளவும் வேண்டும். அதன் ஊடாக திறந்த மனதுடன் எமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அல்லாஹ்வின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாகக்கூடிய எதையாவது செய்தேனா என தினமும் நாம் நம்மையே கேட்டுக் கொள்ளவேண்டும். இக்கேள்விக்கான பதில் எந்தளவுக்கு இதயத்தை குடைந்தெடுக்கும் எனில் எம் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டிடவும் வழிவகுக்கும்.

குறிப்பாக அல்லாஹ்வின் அதிருப்திக்கு ஆளாகக்கூடிய எந்தச் செயலைச் செய்தேன்? என்னை நரகத்தில் தள்ளக்கூடிய எக்காரியத்தில் ஈடுபட்டேன் போன்ற கேள்விகளை தினமும் கேட்டுக்கொண்டே இருந்தாலேயே சீர்திருந்தி காலப்போக்கில் எம்மை சுவனத்தை நோக்கி பயணிக்க அது வழிசெய்யும்.

ஆகவே குர்ஆனின் மீது நம்பிக்கை வைத்து அதனைப் புரிந்துகொண்டு அதன்படி செயற்பட்டு அதன்பால் ஏனையவர்களையும் அழைத்து மறுமை வாழ்வில் வெற்றிபெற முயற்சிப்போம்.

Post a Comment

0 Comments