Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இறை நம்பிக்கையாளனின் பண்பு...


ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. 

அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்' எனக் கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு அதைச் சொல்லாமல் இருந்து விட்டேன். பின்னர் 'அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு 'பேரீச்சை மரம்' என்றார்கள்.

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

துன்பம் நேரும் போது இறை நம்பிக்கையாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்கு இதுவொரு அழகிய உதாரணமாகும். வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பங்களை சந்திப்பவர்கள் தான் அதிகம். அவர்கள் விரும்பும் வாழ்க்கை பெரும்பாலும் யாருக்கும் கிடைப்பதில்லை.அதாவது எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம் உண்டு. அக்காலத்தில், தன் இலைகளை உதிரச் செய்கின்றன. ஆனால் பேரீச்ச மரம் மட்டும் எந்தக் காலத்திலும் இலைகளை உதிரச் செய்வதில்லை. இதைப் போன்று தான் எவ்வளவு துன்பமான நேரம் வந்தாலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு அதை எதிர்கொள்வது அவசியம்.

மேலுமொரு உதாரணத்தைக் குறிப்பிடுவது போன்று நபி (ஸல்) அவர்கள், 'இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர் பயிருக்கு ஒப்பானதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்' என்று கூறினார்கள்.

(ஆதாரம்: புகாரி)

அல்லாஹ்வை நம்பியவன் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அந்த நேரத்தில் கவலை கொள்வான். ஆனால் அதற்காக உள்ளம் தளர்ந்து தவறான முடிவை எடுக்க மாட்டான். எப்படி இளம் தளிர்ப் பயிர், காற்று அடிக்கும் போது சாய்ந்து விட்டுப் பின்னர் எழுந்து விடுகிறதோ இதைப் போன்று இறைநம்பிக்கையாளன் அவனுக்கு வரும் துன்பங்களில் சோர்ந்து இருந்தாலும் சில நாட்களில் சாதாரண நிலைக்கு வந்து விடுவான்.

பெரும் மரங்கள் சாதாரண காற்றுக்கு அசைந்து கொடுக்கா விட்டாலும் பெரும் காற்று அடிக்கும் போது மொத்தமாக சாய்ந்து விடுகிறது. அது திரும்பவும் நிமிர்ந்து நிற்பதில்லை. அத்தோடு அழிந்து விடுகிறது. இது இறை நம்பிக்கை இல்லாதவனுக்கு உதாரணம். சிறிய துன்பமாக இருந்தாலும் பெரிய துன்பமாக இருந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொள்பவன் தான் உண்மையான இறை நம்பிக்கையாளன் ஆவான்.

இன்பங்கள் வரும் போது இறைவனைப் போற்றி, துன்பங்கள் வரும் போது பொறுமையைக் கடைபிடித்து இரு நிலைகளிலும் நன்மை சம்பாதிக்கும் பாக்கியம் இறை நம்பிக்கையாளனைத் தவிர வேறு எவருக்குமில்லை.

'முஃமினுடைய காரியம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அவனுடைய அனைத்துக் காரியங்களும் நல்லதாகவே அமைகின்றன. இந்நிலை முஃமினைத் தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் அவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமையைக் கடைபிடிக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

அதனால் சோதனைகள் நன்மைக்கே என்பதை முஸ்லிம்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையே இந்நபிமொழி எடுத்தியம்புகிறது. மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்' என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

அதேநேரம் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் நமது பாவங்களை அழிக்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 'ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள் கூட துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் காய்ச்சலுக்கு உள்ளாகி சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களிடம் சென்று அவர்களை(ப் பணிவோடு) நான் தொட்டேன். அப்போது நான், 'தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம். உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)' என்றார்கள். நான், '(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் 'ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக) மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை' என்றார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸுத் (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)

ஆகவே என்ன தான் துன்பங்கள், கவலைகள், சோகங்கள், கஷ்டங்கள், சிரமங்கள் ஏற்பட்டாலும் பொறுமையோடும் சகிப்புதன்மையோடும் இறைவனில் நம்பிக்கை வைத்தவர்களாக அவற்றை எதிர்கொண்டு இறையருளைப் பெற்றிட முயற்சிப்போம்.

- அப்துல்லாஹ் -

Post a Comment

0 Comments