Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

திட்டுதலும் சபித்தலும் ஆகுமானதா?


ஒரு முஸ்லிம் கோபப்படுவது அல்லாஹ்வுக்காகத்தான் என்றானபோது, அக்கோப வேளையில் வெறுப்பான சொற்களைக் கொட்டுதல், அசிங்கமாகத் திட்டுதல் போன்ற செயல்கள் வெளிப்படாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு முஸ்லிம் இயல்பாகவே அருவருப்பாக பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், சபித்தல் போன்ற வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய பண்புகளைத் தவிர்த்து இஸ்லாமிய வழிமுறையைப் பின்பற்றுவார்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்' என்றார்கள் (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

மற்றொரு சந்தர்ப்பத்தில், 'அசிங்கமான செயல்களைச் செய்பவரையும், அசிங்கமான சொற்களைப் பேசுபவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஃஜமுத் தப்ரானி, முஸ்னத் அஹ்மத்). அத்தோடு, 'மடத்தனமான செயல்களை செய்பவரையும், ஆபாசமான செயல்களை செய்பவர்களையும் அல்லாஹ் கோபிக்கிறான்' என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 
(ஆதாரம்: முஃஜமுத் தப்ரானி)

'முஃமின் (அல்லாஹ்வை விசுவாசித்தவர்) குத்திக் காட்டுபவராகவோ, சபிப்பவராகவோ, மூடத்தனமான செயலை செய்பவராகவோ, ஆபாசமாகப் பேசுபவராகவோ இருக்கமாட்டார்' என்றுள்ளார் நபி (ஸல்) அவர்கள். 
(ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத்)

உண்மையான இறைவிசுவாசியிடம் சக மனிதர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வார்த்தைகள் வெளிப்படாது. நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிச் செயல்களும் வார்த்தைகளும் அவரில் வெளிப்படும்.

இதற்கு நபி (ஸல்) அவர்களிடம் பணியாற்றிய அனஸ் (ரழி) அவர்களின் அறிவிப்பு நல்ல எடுத்தக்காட்டாகும். 'நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான செயலை செய்பவராகவோ, சபிப்பவராகவோ, எசுபவராகவோ இருக்கவில்லை. மிகவும் கோபமான சந்தர்ப்பங்களில், 'அவருக்கென்ன நேர்ந்தது. அவரது நெற்றி மண்ணாகட்டும்' என்று சொல்பவர்களாக இருந்தார்கள். 
(ஆதாரம்: புஹாரி)

மேலும் ஏகத்துவ அழைப்பை ஏற்க மறுத்த இறை நிராகரிப்பாளர்களைப் சபிப்பதிலிருந்தும் நபி (ஸல்) அவர்கள் தவிர்ந்து கொண்டார்கள். அவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைக் கூட அன்னார் கூறியதில்லை.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்' என்று கூறப்பட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நான் சபிப்பவராக அனுப்பப்படவில்லை. அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன்' என்றுள்ளார்கள். 
(ஆதாரம்: முஸ்லிம்)

மற்றொரு தடவை மது அருந்திய மனிதரொருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் 'அவரை அடியுங்கள்' என்று கூறினார்கள். எங்களில் சிலர் கைகளைக் கொண்டும், சிலர் செருப்புகளைக் கொண்டும், சிலர் துணியைக் கொண்டும் அவரை அடித்தனர். அடித்து முடித்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் 'அல்லாஹ் உன்னை இழிவுபடுத்தட்டும்' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் 'அவ்வாறு சொல்லாதீர்! அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்' என்று கூறினார்கள். 
(ஆதாரம்: புஹாரி)

இதன் ஊடாக பாவமும், வழிகேடும், வரம்பு மீறுதலுமே வழமையாகக் கொண்டவரிடமும் கருணை காட்டுவதற்கு இஸ்லாம் வழிகாட்டியுள்ளது என்பது தெளிவாகிறது. நபி (ஸல்) அவர்கள் மக்களின் உள்ளங்களிலிருந்து குரோதம், விரோதம் ஆகியவற்றைக் களைந்தார்கள். மக்களின் கண்ணியத்தை தகர்க்கும் விதமாக தனது நாவை பயன்படுத்தியவரின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதையும் எடுத்துக்கூறினார்கள். நியாயமற்ற அவதூறுகளையும் வரம்பு மீறிய குற்றச்சாட்டுகளையும் அருவருப்பான வார்த்தைகளையும் பிறர்மீது வீசி எறிபவன் மறுமை நாளில் எண்ணற்ற நன்மைகளைச் சுமந்து வந்தும், அவனது தீய செயல்கள் அனைத்து நன்மைகளையும் சூறையாடிவிடும். தன்னை நரகிலிருந்து காக்கும் எவ்வித சாதனமுமின்றி சபிக்கப்பட்டவனாக நரகில் வீசப்படுவான் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், 'பரம ஏழை யாரென்பதை நீங்கள் அறிவீர்களா?' என நபித்தோழர்களிடம் வினவிய போது, 'எவரிடம் ஒரு திர்ஹம் கூட இல்லையோ, இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவரையே நாங்கள் பரம ஏழையாகக் கருதுவோம்' என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எனது உம்மத்தில் பரம ஏழை யாரெனில், அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத்தைக் கொண்டு வருவார். ஆனால் அவர் ஒருவரை திட்டியிருப்பார், மற்றொருவரை அவதூறு பேசியிருப்பார், ஒருவருடைய பொருளை அபகரித்திருப்பார், ஒருவரை கொலை செய்திருப்பார், ஒருவரை அடித்திருப்பார். அவருடைய நன்மைகள் அவர்களில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அவர் மீதுள்ள குற்றங்கள் முடிவதற்கு முன்னால் அவரது நன்மைகள் தீர்ந்துவிடும்போது பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களை எடுத்து அவர்மீது சுமத்தப்பட்டு அவர் நரகில் வீசி எறியப்படுவார் என்று குறிப்பிட்டார்கள். 
(ஆதாரம்: முஸ்லிம்)

உண்மையான இஸ்லாமிய சமூகத்தில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் இறைசமூகத்தில் விசாரிக்கப்படும் என்பதை ஆழமாக உணர்ந்திருப்பர். வீண் விவாதம், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதிலிருந்து தன்னை தற்காத்து கொள்வர்.

அதனால் 'ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால் மற்றவர் வரம்பு மீறாதிருக்கும் வரை அதன் பாவங்கள் அனைத்தும் அதை ஆரம்பித்தவருக்கே உரியதாகும்' என (ஆதாரம்: முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்வது அவசியம். இதன் ஊடாகப் பிறரைத் திட்டுவதிலிருந்து நாவைப்பேணி, கொழுந்து விட்டெரியும் கோப ஜுவாலையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வழிவகுக்கும்.

அதேநேரம் தனது வாழ்வில் இறந்தவர்கள் உட்பட பிறரை நாவால் காயப்படுத்துவதிலிருந்து உணமையான முஸ்லிம் தவிர்ந்து கொள்வார். இருப்பினும் சிலர் தம் நாவுகளால் உயிருள்ளவர்களை மட்டுமின்றி மரணித்தவர்களையும் கூட தவறாக பேசிக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள், 'மரணித்தவர்களைத் திட்டாதீர்கள்! நிச்சயமாக அவர்கள் தாங்கள் முற்படுத்தியதை அடைந்து கொண்டார்கள்' என்றார்கள். (ஆதாரம்: புஹாரி)

ஆகவே ஏசுதல், திட்டுதல், அருவருப்பாக பேசுதல் போன்ற இழி செயல்களிலிருந்து தமது நாவை காத்துக்கொள்வது போன்று மக்களைப் பெரும்பாவி என்றும், இறை மறுப்பாளர் என்றும் கூறுவதிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், 'ஒரு மனிதர் மற்றவரை இறைநிராகரிப்பாளர் அல்லது பெரும்பாவி என்று கூறிய போதிலும், அம்மனிதர் அதற்குரியவராக இல்லாவிடில் அத்தன்மை கூறியவரிடமே திரும்பிவிடும் என்றுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி) அதனால் அவ்வாறான நிலைமைகளைத் தவிர்ந்து கொள்வதில் உச்சபட்ச கவனம் எடுத்துக்கொள்வோம்.

- மின்ஸார் இப்றாஹீம் - 

Post a Comment

0 Comments