Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

படிப்பினைகள் நிறைந்த ஹிஜ்ரத்...


ஹிஜ்ரா’ அல்லது ‘ஹிஜ்ரத்’ என்பது இறைவனின் மார்க்கத்தைப் பூரணமாகப் பின்பற்ற முடியாதபடி நெருக்கடி தரும் ஓர் இடத்தை விட்டு வெளியேறி வேறொரு இடத்திற்குச் செல்வதாகும்.

அதாவது நபித்துவம் கிடைக்கப்பெற்று ஏறத்தாழ ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் குரைஷியர் முஸ்லிம்களுக்கு அளித்த தொல்லைகள் எல்லை மீறி போவதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். தம் தோழர்கள் எந்த நிலையிலும் இஸ்லாத்தைக் கைவிட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து நபிகளார் பெரிதும் கவலை கொண்டார்கள். அதனால் இறைவிசுவாசிகளில் ஒரு தொகுதியினரை மக்காவை விட்டு அபிசீனியாவுக்கு அனுப்பி வைக்க அன்னார் முடிவு செய்தார்கள். இதற்கேற்ப பன்னிரண்டு ஆண்களும், நான்கு பெண்களும் அபிசீனியா சென்றனர். இதுவே இஸ்லாத்தின் முதல் ‘ஹிஜ்ரத்’ ஆகும்.

‘ஹிஜ்ரத்’ என்ற அரபுச் சொல்லுக்கு இடம் மாறுதல், புலம் பெயர்தல், விட்டு விடுதல், வெறுத்து விடுதல் என்பன அர்த்தமாகும். அந்த வகையில் இறைத்தூது கிடைக்கப்பெற்றது முதல் மக்காவில் வாழ்ந்த பதிமூன்று ஆண்டு காலமும் நபி (ஸல்) அவர்களும் இறைவிசுவாசிகளும் பலவிதமான இன்னல்களுக்கு முகம் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் இறைத்தூதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்கள். இந்நிலையில் குரைஷியர் நபி (ஸல்) அவர்களைப் படுகொலை செய்யவும் திட்டம் தீட்டினர். அதனால் இறைவனின் கட்டளைக்கு ஏற்ப நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மக்காவை விட்டு மதீனாவை நோக்கி யாரும் அறிந்து கொள்ளாத வகையில் இரவோடு இரவாகப் புறப்பட்டார்கள். அதுவே இஸ்லாத்தின் இரண்டாவது ‘ஹிஜ்ரத் ஆகும். இப்புலம்பெயர்வு முஹர்ரம் மாதம் தான் இடம்பெற்றது.

இப்புலப்பெயர்வின் போது கரடு முரடான கற்கள் நிறைந்த பாதையின் ஊடாக பயணத்தை மேற்கொண்ட நபி (ஸல்) அவர்களும் அன்னாரது தோழரும் மக்காவிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ‘தவ்ர்’ குகையில் தங்கினர். இதேவேளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் தோழருடன் தப்பி விட்டார் என்பதை அறிந்த குரைஷியர், சல்லடை போட்டு அவர்களைத் தேடலாயினர். ஒரு கட்டத்தில் இருவரும் பதுங்கி இருந்த அக்குகையின் வாசல் வரையும் வந்து விட்டனர்.

இச்சமயம் மக்காவின் மந்திரக்காரர் அபூகர்ஸ் 'இருவரும் இவ்விடத்தை விட்டு ஓரடியும் நகரவில்லை. அவர்கள் இக்குகைக்குள் தான் பதுங்கி இருக்க வேண்டும்' என்று உரத்தக் குரலில் கூறினார். இதைக் கேட்டதும், அபூபக்கர் (ரலி) அவர்களின் உடல் தளர்ந்தது. உள்ளம் சோர்ந்தது. நபிகளார் எதிரிகள் கையில் சிக்கினால் நிலைமை என்னவாகும்? என்பதை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் கரைபுரண்டது.

இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள் 'ஏன் கலங்குகிறீர்கள், அபூபக்கரே!' என்று கேட்க. 'இறைத்தூதரே! அங்கே பாருங்கள். அவர்கள் பலர் இருக்கிறார்கள். இங்கே நாம் இருவர் மட்டுமே' என்றார். அப்போது நபிகளார், 'அஞ்சாதீர். நாம் இருவர் மட்டுமல்ல. அல்லாஹ்வும் நிச்சயமாக நம்மோடு இருக்கின்றான்' என்று அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அச்சமயம் குரைஷியரில் ஒருவர், 'வாருங்கள், நாம் குகையின் உள்ளே சென்று பார்ப்போம்' என்றான். அதற்கு மற்றொருவர், 'குகை வாசலில் பின்னப்பட்டிருக்கும் சிலந்தி வலையைப் பாருங்கள். இது முஹம்மது பிறப்பதற்கு முன்பே பின்னப்பட்டது போலத் தெரியவில்லையா? நாம் ஏன் உள்ளே சென்று நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ள வேண்டும்' என்றார். அதனால் அவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று சென்று தேடலாயினர்.

நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் மூன்று இரவுகள் அங்கு தங்கினர். அபூபக்கர் (ரலி) அவர்களுடைய மகன் அப்துல்லாஹ்வும் அங்கு சென்று இரவு தங்கக்கூடியவராக இருந்தார். ஆனால் இரவின் இறுதிப் பகுதியில் அவர் வெளியேறி விடிவதற்குள் மக்காவுக்கு வந்து விடக்கூடியவராக இருந்தார். அபூபக்கர் (ரலி) அவர்களின் மகனார் இவர்களைப் பற்றிய ஏதேனும் செய்திகளை மக்காவில் கேட்டால், அதை நினைவில் வைத்துக் கொண்டு இருள் சூழ்ந்தவுடன் இருவரிடமும் வந்து அச்செய்தியை எடுத்துரைக்கக்கூடியவராக இருந்தார். இதேவேளை அபூபக்கர் (ரலி) அவர்களின் பணியாளர் ஆமிர் இப்னு புகைரா அப்பகுதியில் ஆடுகளை மேய்த்து விட்டு பொழுது சாய்ந்தவுடன் இருவருக்கும் ஆட்டுப் பாலை கறந்து கொடுக்கக்கூடியவராக இருந்தார். மூன்று இரவுகள் அவர் அவ்வாறு செய்தார்.

நான்காம் நாள் நபிகளாரும் அவரது தோழரும் ‘தவ்ர்’ குகையில் இருந்து வெளியேறினர். பயணத்திற்காக இரண்டு ஒட்டகங்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். தடை பலவற்றைக் கடந்து 8-வது நாள் ‘குபா’ என்ற இடத்தை அவர்கள் அடைந்தனர். இந்த ஊர் மதீனாவில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது. இங்கு அன்சாரிகளான மதீனாவாசிகள் பலரின் குடும்பங்கள் வசித்து வந்தன. அவர்களிடையே அம்ர் பின் அவ்ப் (ரலி) அவர்களின் குடும்பம் மிகவும் சிறப்புற்றதாக விளங்கியது. குல்தும் பின் ஹதம் என்பவர் அதன் தலைவராக இருந்தார். அவர்கள் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி இருந்தார்கள். இதற்கிடையே அலி (ரலி) அவர்களும் மக்காவைத் துறந்து குபா வந்து நபிகளாருடன் இணைந்து கொண்டார்கள்.

குபாவில் தங்கி இருந்தபோது நபிகளார் செய்த முதல் பணி அங்கு ஓர் இறை இல்லத்தை நிர்மாணித்து அதில் தொழ வைத்தார்கள். குபாவில் கட்டப்பட்ட அந்த இறை இல்லமே, நபித்துவத்திற்குப் பிறகு கட்டப்பட்ட முதல் மஸ்ஜித் ஆகும். மறுநாள் வெள்ளிக்கிழமை, அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்த போதிலும் இடைவழியில் ‘ளுஹர்’ (பகல் நேரத் தொழுகை) தொழுகைக்கான நேரம் வந்து விட்டது. அதனால் ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து ‘ஜும்ஆ’ தொழுகையை நிறைவேற்றி மக்களிடையே நபி(ஸல்) அவர்கள் பேருரை நிகழ்த்தினார்கள். அதுவே முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ தொழுகை ஆகும். இத்தொழுகையில் 100 பேர் கலந்து கொண்டனர்.

இந்த ஹிஜ்ரத் உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் பலபடிப்பினைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் யார் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் பல மனித சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். அல்லாஹ்விற்காக சொந்தம், பந்தம், சொத்து சுகங்களை, ஏன் இறுதியில் ஊரை விட்டும் வெளியேறுவதற்கு தயாராகவே இருக்க வேண்டும், உயிரையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதை நபிகளாரின் அழகிய திட்டமிடல் எமக்கு கற்றுத் தருகின்றன. அத்தோடு வாழ்க்கையில் திட்டமிடல், மசூறா,இஸ்திகாறா ஆகியவற்றின் மூலம் முடிவு எடுத்தால் அதில் நன்மைகள் உண்டு, சிரமத்திற்கு பின்னால் வெற்றி நிச்சயம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

எனவே ஹிஜ்ரத் பயணத்தை நினைவு கூறுவதுடன் அதன்மூலம் படிப்பினைகள் பெற்று வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்ள அல்லாஹ் எம் அனைவருக்கும் தௌபீக் செய்யட்டும்.

ஏ.எச்.எம். மின்ஹாஜ்
முப்தி (காஷிபி)

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments