Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாத்தில் கணவன் - மனைவி உறவு...


பெண்ணாகப் பிறந்தவள் பெருமைக்குரிய அந்தஸ்தைப் பெற்றிருப்பவள் ஆவாள். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்த இறைவன் அவர் சுகம் பெறவும், அமைதியடையவும் அவரது இடதுபுற விலா எலும்பிலிருந்து முதல் பெண்மணியைப் படைத்தான். அப்பெண்ணே எமது முதல் தாயாகிய ஹவ்வா (அலை) ஆவார்.

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கும் அமைய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை பெண்களும் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கணவனின் பொருத்தப்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியவர்களாவர். தவறும் பட்சத்தில் படைத்தவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி நேரிடும் என்பதையே அல் குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தியம்புகின்றன.

அதேநேரம் ஆணும் சொர்க்கம் புகவென பல கடமைகளை நிறைவேற்ற வேண்டியவனாக இருக்கிறான்.

குடும்பத்திற்காக ஹலாலான வழியில் சம்பாதிக்க வேண்டும். குழந்தைகளை நல்லமுறையில் மார்க்கக் அறிவூட்டி வளர்த்து அவர்களை ஆளாக்க வேண்டும். பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். உடன் பிறப்புக்கள், இனபந்துக்கள், இரத்த உறவுகளைப் பேணிக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில், 'உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறான்.

பெண்ணானவள் தன் கணவனுக்கு பணிவிடை செய்து தன்கற்பையும் கணவனின் சொத்துக்களையும் காப்பாற்றி கணவனின் பொருத்தப்பாட்டைப் பெற்றவளாக மரணிக்கும் போது அவள் சேருமிடம் சொர்க்கமாகவே இருக்கும்.

கணவன் தீய பண்புகளைக் கொண்டவனாக இருந்தாலும் பொறுமையுடன் அவனை நல்வழிப்படுத்த முயற்சிப்பதோடு அவனுக்குரிய கடமைகளையும் நிறைவேற்றியபடி வாழும் மனைவிக்கு அல்லாஹ்விடத்தில் நற்கூலி கிடைக்கப்பெறும். அல்லாஹ்வின் மகாவிரோதியும், மூஸா (அலை) அவர்களை எதிர்த்தவனுமான எகிப்து நாட்டு கொடுங்கோல் அரசன் பிர்அவ்னின் மனைவி ஆசியா அம்மையார் அம்மன்னனின் கொடுமைகளைத்தாங்கி வாழ்ந்ததனால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையையே அன்பளிப்பாக உருவாக்கியுள்ளமை நல்ல எடுத்துக்காட்டாகும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஸஹாபா தோழர்களிடம், 'மனிதனுக்கு மனிதன் சுஜுது செய்வதாக இருந்தால் பெண்களைத் தம் கணவன்மாருக்கு சுஜுது செய்ய ஏவியிருப்பேன்' என்றுள்ளார்கள்.

இதன் மூலம் ஒரு பெண் தன் பெற்றோர், அவள் உடன்பிறப்புக்கள் யாவரையும் விட மிக உயர்ந்த இடத்தில் வைத்து கண்ணியத்துடன் போற்ற வேண்டியது அவளது கணவன் தான். ஏனெனில் கணவன் மூலமே அவள் சொர்க்கம் புக முடியும்.

தன் கணவனின் கட்டளைகளை ஏற்று, கற்புநெறி பிறளாது நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த ஒரு விறகு வெட்டியின் மனைவியே பெண்களில் முதன் முதலில் சொர்க்கம் நுழைவாள்' என்று நபி(ஸல்) அவர்கள் தன் மகளார் பாத்திமா(ரலி) அவர்களிடம் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் விண்ணுலக யாத்திரையின்போது, நரகத்தை எட்டிப்பார்த்தபோது அங்கே அதிகம் பெண்களைக் கண்டார்கள்.இது ஏன் என ஜிப்ரியீல் (அலை) அவர்களிடம் வினவிய போது, 'இப்பெண்கள் தங்கள் கணவன்மாருக்கு மறுசெய்தவர்களாகவும், நன்றிகெட்டவர்களாகவும் அதிகமாக சாபமிடுபவர்களாகவும் இருந்தார்கள். அதனால் தான் இந்நிலை' என்றார்கள்.

ஒரு முறை மஸ்ஜிதுன் நபவிக்கு ஒரு பெண்ணின் ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அதைத்தொழுவிக்க நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தக்பீருக்கு கையை உயர்த்தியபோது ஜிப்ரியீல் (அலை) அவர்கள் அங்கு பிரசன்னமாகி, 'அப்பெண்ணின் கப்ரைப் பார்த்தபின் அவளது ஜனாஸாவைத் தொழுவிக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்' என்றார்கள்.

அதன் பிரகாரம் நபிகளார் அப்பெண்ணின் கப்ரைப் பார்த்தார்கள். சுப்ஹானல்லாஹ் அவளது கப்றுக்குள் விஷப்பாம்புகளும், தேள்களும் குவிந்து காணப்பட்டன.

கவலையும் கண்ணீரும் பெருக மீண்டும் தொழுவிக்க நபி(ஸல்) அவர்கள் முயன்றபோது, ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதைத்தடுத்து அவள் கப்ரை மீண்டும் பார்த்தபின் தொழுவிக்குமாறு அல்லாஹ் கூறுகிறான்' என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அவள் கப்ரை மீண்டும் பார்த்தபோது அதனுள் அக்னி குண்டமாக எரிகிறது. விஷஜந்துக்கள் நெருப்பு கங்காக நெழிகின்றன.

நபி(ஸல்) அவர்கள், 'இப்பெண் என்ன பாவம் செய்திருப்பாள்? என்று எண்ணியவராக அப்பெண் ஜனாஸாவின் அண்டை வீட்டாரிடம் அவளைப்பற்றி விசாரித்தபோது, அவர்கள், 'இப்பெண் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார், தவறாமல் தொழுவார், சதா குர்ஆன் ஓதுவார்' என்றனர். அப்படியானால் ஏன் இப்படி அவளது கப்ர் பயங்கரமாக காணப்படுகிறது? என்று எண்ணிய நபி(ஸல்) அவர்கள் அந்த மையத்துக்கு வருகை தராத அவளது கணவனிடம் அவளைப்பற்றி விசாரித்தபோது, அவர், 'நான் தாகத்திற்கு தண்ணீர் கேட்டால், நீர் சென்று எடுத்துக்குடி, நான் குர்ஆன் ஓதுகிறேன்' என்பாள். உணவு கேட்டால், 'எங்காவது சென்று சாப்பிடு' என்பாள்.

எந்நேரமும் என்னுடன் சண்டையிடுவாள்'. அதனால் அவளை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன்" என்றார்.

உங்கள் மனைவி எல்லா அமல்களும் செய்தார். ஆனால் உங்கள் பொருத்தத்தை இழந்துவிட்டார். கணவனின் பொருத்தம் பெறாததால் உங்கள் மனைவி நரகம் செல்கிறாள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியபடி தாடி நனையுமளவுக்கு அழுததோடு, உங்கள் மனைவியை மன்னியுங்கள் என்றும் அவளது கணவரிடம் கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கேற்ப அவளது கணவன் அவளை மன்னித்ததும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்கு ஜனாஸாத் தொழுகை நடாத்தினார்கள். அதனால் அவள் கப்ர் சுவர்க்க பூங்காவாக மாறியது.

மெளலவியா பாத்திமா ஷுஃபியா
கொழும்பு 12

Post a Comment

0 Comments