Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாம் போதிக்கும் மனிதாபிமானம்...!


மனிதாபிமானம், ((Humanity) ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கவேண்டிய அடிப்படைப் பண்பாகும். அது இஸ்லாம் வலியுறுத்துகின்ற மார்க்கப் பெறுமானங்களில் ஒன்று.

இஸ்லாம் தனிப்பண்புகளைக் கொண்ட ஓர் உன்னத மார்க்கமாகும். அந்தவகையில் 'இன்ஸானிய்யா' என்பதற்கு மனிதன் சார்ந்தது எனப் பொருள்படுகின்றது. அல்லாஹுதஆலா வகுத்திருக்கின்ற இறைசட்டங்களை நோக்கும்போது, அவை மனித நலன்களையும், இயல்பு சுபாவங்களையும், பலவீனங்களை கருத்திற் கொண்டிருப்பதைக் காணலாம்.

மனிதனில் இஸ்லாம் மனிதத்தையே காண்கிறது. மொழி, நிறம், இனம், நாடு என்பவற்றை வைத்து மனிதனை அது கூறுபோட முனைவதில்லை. சிந்தனையில், கொள்கையில் வேறுபட்டவனையும் அது மனிதனாகவே பார்க்கிறது. அல்லாஹுதஆலா அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

'மனிதர்களே! உங்களை நாம் ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்.

ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.' (ஆதாரம்: ஹுஜுராத்: 13)

மேலும் 'மக்களிடம் பேசும் போது நல்லதைப் பேசுங்கள்' (ஆதாரம்: பகரா: 83) என அல்குர்ஆன் உபதேசிக்கின்றது. எனவே மக்களிடம் அன்பாகவும் முகமலர்ச்சியோடும் அழகிய வார்த்தைகளைக் கொண்டும் உரையாடுவது மனிதநேயத்தின் பண்பாகும்.

இப்பின்புலத்திலிருந்தே மனிதனை ஒரு முஸ்லிம் நோக்குகிறான். மனிதனில் அவன் மனிதத்தையே காண்பான். இனம், மதம், மொழி, தேசம், நிறம், அந்தஸ்து பாகுபாடு அவனிடம் காணப்பட மாட்டாது.

அடுத்த மனிதர்களுடனான உறவில் மனிதத்தையும், மானுடத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் மார்க்கம் வலியுறுத்துகிறது. மனிதாபிமானம், உறவுகளுக்கு அடிப்படையாக அமையும் பிரதான பண்புகளில் ஒன்றாகும்.

முஸ்லிம்களோடு மாத்திரமல்லாமல் பிறமதத்தவர்களுடனும் மனிதத்தன்மையோடும், சகோதர வாஞ்சையோடும் நடந்துகொள்ள வேண்டும் என மார்க்கம் உபதேசிக்கிறது.

இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மனித நேயத்திற்கான ஏராளமான உதாரணங்களை நாம் கண்டுகொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட மனித நேயத்தூதராவார்.

ஒரு தடவை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாகக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு யூதரின் பிரேதத்திற்காக அன்னார் எழுந்து நின்றார்கள். 'ஏன் எழுந்தீர்கள், அது யூதரின் பிரேதமல்லவா?' என கேட்கப்பட்டபோது 'அதுவும் ஓர் ஆன்மாவே' என பதிலளித்தார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி)

மனிதர்களோடு மாத்திரமின்றி உயிரினங்களிடத்திலும் அன்பாகவும் ஜீவ காருண்யத்தோடும் நடந்துகொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அது ஈமானுக்கு மிக நெருக்கமான பண்பாகும். சுவனம் செல்வதற்கும் அது காரணமாக அமைந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

அவை தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை மனிதநேயப் பண்புகளில் ஈடுபடுகின்றவர்களை ஊக்கப்படுத்துவதையும் மானுடப்பண்பை வலியுறுத்துவதையும் அவை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு பிரகடனப்படுத்தி இருக்கும் சர்வதேச மனிதாபிமானத் தினமும் நல்ல சந்தர்ப்பமாகும்.

இத்தினம் வருடாவருடம் ஆகஸ்ட் 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதனால் இஸ்லாம் போதிக்கும் மனித நேயத்தையும் அதன் வலியுறுத்தல்களையும் மக்கள் மயப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அவை மக்களுக்கு நன்மைகள் பயக்கும் காரியமாக அமையும்.

ஆகவே மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள சர்வதேச தூதுத்துவத்தை சுமந்துள்ள நாமும் மனிதாபிமானத்தோடும் மானுடத்தன்மையோடும் எமது செயல்பாடுகளை ஒழுங்கமைத்து கொள்வதோடு நாட்டில் முன்மாதிரிமிக்க பிரஜைகளாக வாழ எல்லாம் வல்ல எமக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஊடகப் பிரிவு

Post a Comment

0 Comments