Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கல்வி அமைச்சினால் வரலாற்றில் முதல் தடவையாக நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா...!


கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவின் ஏற்பாட்டில் யட்டிநுவர பிரதேச சபையின் வசீர் முத்தாரின் ஒருங்கிணைப்பில் தேசிய மீலாதுன் நபி விழா கண்டி பதியூதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக கடந்த (25) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சின் மேலகதிகச் செயலாளர் , கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவுக்கான பணிப்பாளர் N.T.நசுமுதீன், கண்டி மத்திய மகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் பணிப்பாளர் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் M.S.சஹீமா, கண்டி மாநகர முதல்வர் கேசர சேனாநாயக்க, பிரதி முதல்வர் இலாஹி ஆப்தீன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஹிதாயத் சத்தார், ஜெய்னுலாப்தீன் லாபீர், அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, சர்வ சமயத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட கலை, கலாசார நிகழ்வுகள் அரங்ககேற்றபட்டன. இதில் அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மாணவர்களின் பொல்லடி பார்வையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் உரையாற்றும் போது,..

விசேடமாக கல்வி அமைச்சைப் பொறுத்தவரையில் அதுவும் கல்வி அமைச்சின் வரலாற்றிலே இந்த நிகழ்வு ஒரு மைல்கல் என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம் முதன் முறையாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திப் பிரிவு இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.இந்த நிகழ்வானது ஒரு நல்ல ஆரம்பம், நல்ல எடுத்துக் காட்டு, முன்னுதாரணமுமாகும். ஆகவே எதிர்வரும் காலங்களில் இது தொடர்ச்சியாக அமைச்சின் ஊடாக மேற்கொள்ளக் கூடிய நல்ல சந்தர்ப்பத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டி செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். 

இறைத் தூதுவராக இறைவனால் படைக்கப்பட்டவர் தான் நபி நாயகம் (ஸல்) அவர்கள். இறைவனின் தூதுவராக இறைவனின் நற்சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவராகப் படைக்கப்பட்ட இறை தூதுவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு எம் எல்லோரையும் மகிழ்விக்கக் கூடியதாக இருக்கிறது.

உலகிலே பல்வேறு மதங்கள் இருக்கின்றன. மதங்கள் பல்வேறு சிந்தனைகள் எடுத்தியம்புகின்றன. ஆனால் அனைத்து மதங்களும் தர்மத்தைத் தான் போதிக்கின்றது. எந்தவொரு மதமும் தர்மத்திற்குப் புறம்பாகச் செயற்படுமாறு போதிப்பது கிடையாது. அந்த வகையிலே புனித அல்குர்ஆனாக இருக்கலாம், இஸ்லாமிய மதப் போதனைகளாக இருக்கலாம். அனைத்து சமயங்களும் மனிதர்கள் தர்மசீலர்களாக வாழ வேண்டும் என்பதை மாத்திரமே பறை சாற்றி நிற்கின்றது.

எந்தவொரு மதமும் எந்தவொரு சமயமும் தர்மத்திற்குப் புறம்பாகச் செயற்படுமாறு கூறியது கிடையாது. அறிவுரை வழங்கியது கிடையாது. கொடூரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனையைத் தோற்றுவித்தமை கிடையாது. கடவுள் ஒருவரே என்பதையே அனைத்து மதங்களும் ஏற்றுக் கொண்டிக்கிறன. இறைவன் நம் முன்னால் வந்து நிற்பதில்லை. நாம் எவரும் இறைவனைக் கண்கொண்டு பார்த்தது கிடையாது. ஆனால் நாம் இறைவனின் தூதுவர்களைப் பார்த்திருக்கின்றோம். இறைவனின் தூதுவர் ஊடாக இறைவன் சொல்லித் தரும் பாடங்களைக் கற்றிருக்கின்றோம். கேட்டு இருக்கின்றோம். கேட்டு வருகின்றோம். தொடர்ந்து செய்வதற்கும் மனத்திருப்தியோடு காத்திருக்கின்றோம்.

ஆகவே இவ்வாறு தூதுவரின் ஊடாக மக்களுக்கு கொண்டு சென்ற அந்த போதனைகள் மக்கள் நலமாக வாழ்குவதற்கு மக்கள் சுகமாக வாழ்வதற்கு தர்மசீலர்களாக வாழ்வதற்கு வழியமைத்துள்ளது.

நபி முஹம்மது அவர்கள் நபித்துவம் வழங்கப்பட்டு 23 வருட காலமாக ஆட்சி செய்தவர். அவர்கள் புனித மக்கா நகரிலே பிறந்தார். ஒரு ஜனாதிபதியாக, ஒரு படைத் தலைவராக, மதத் தலைவராக, கல்வியின் தந்தையாக அவர் நாமம் என்றும் போற்றப்படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் சமமான கல்வி என்ற விடயத்தை மிகத் தீவிரமாக ஒவ்வொரு இஸ்லாமியர்களின் மனதில் ஊட்டிய பெருமை அவரைச் சாரும்.அவர் எமக்கு பல்வேறு போதனைகளைப் புகட்டியிருக்கிறார். தந்திருக்கின்றார்.

மூவினங்களும் கைகோர்த்து இந்நாட்டில் வாழ்வதை நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதைப் போன்று இடையிலே ஒரு சில விஷமிகள், மதங்களுக்கிடையிலே வேற்றுமைகளை ஏற்படுத்துவதும். மக்களுக்கிடையிலே குரோத எண்ணங்களை ஏற்படுத்துவதும் அல்லது சமூகங்களுக்கு மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்துவதற்கு எத்தனிப்பதை நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே நாங்கள் இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் விஷமிகளின் தேவை அதுவாக இருக்கின்றது. 

சமூகங்களுக்கிடையே வேற்றுமைகளை ஏற்படுத்துவது, குழப்பத்தை உருவாக்குவது, ஒற்றுமையை சீர்குலைப்பது பல்வேறு முயற்சிகளை விஷமிகள் ஏற்படுத்துகின்றார்கள். ஆகவே இவ்விடயம் குறித்து அவதானமாகவும் கவனமாகவும் இருத்தல் வேண்டும். முன்னாள் அமைச்சர் ஹக்கீம் கூறியதைப் போன்று தேசிய கல்வி நிறுவனத்திலே இப்பொழுது ஒரு வித்தியாசமான செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி நான் என் மனதில் ஆழமாகப் பதிய வைத்தேன். அதற்கு எவ்வாறான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அதைச் செய்வதற்கு உங்களோடு ஒருவனாக இருக்கின்றேன் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படும் புதிய வேலைத் திட்டம்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருந்தார். ஆனால் வெளிநாடு செல்ல வேண்டி ஏற்பட்டதால் அவர் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே அதற்குப் பதிலாக நான் வர வேண்டியிருந்தது. இவ்வாறான ஒரு வரலாற்றுமிக்க ஒரு இந்நிகழ்வில் நான் கலந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சிடைகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது,..

கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவினால் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்தமை நல்லதொரு சந்தர்ப்பமாகும்.இது பாராட்டபட வேண்டிய விடயம். இவ்விடயம் தொடர்பில் துரிதமான கொள்கையை எடுத்து மிகக் குறுகிய காலத்தில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தமை வரவேற்கத்தக்கது. நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் பாடசாலை மாணவ, மாணவிகளின் பங்களிப்போடு பல நிறைவான நல்ல நிகழ்ச்சிகளை அரங்கேற்றியமை வரவேற்கத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கண்டி மாவட்டத்தில் கல்வித் துறையில் நல்லதொரு இடத்தைப் பெற்றுள்ள கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இந் நிகழ்வு நடைபெற்றதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். எல்லாப் பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் கொரோனா தாக்கத்தின் விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். அந்தப் பாதிப்பையும் தாண்டி இன்று பாடசாலைகள் படிப்படியாக தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை மீளமைத்துக் கொண்டு வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்திலும் குறிப்பாக இரண்டு வருடங்களில் பாரிய மாற்றங்கள் பாட விதானங்களில் ஏற்படப் போகிறது என்பது எமது எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். தேசிய கல்வி நிறுவனம் அதற்கான புதிய மாதரிகளை உருவாக்கி வருகிறது.

சர்வதேச ரீதியாக கல்விச் செயற்பாடுகளில் ஏற்பட்டு வருகின்ற புதிய மாற்றங்களை உள்வாங்கி ஒரு புதுவிதமான கல்வி சார் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது.

அதை அமுல்படுத்துவதற்கான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பிக்க இருந்தது. பின்னர் அது 2024 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று நாங்கள் அறிகிறோம். அதில் வரவேற்கத்தக்க புதிய அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன என அறியக் கிடைத்துள்ளது.

நாம் ஒரு சமூகம் என்ற அடிப்படையில் சில சவால்களை துரதிருஷ்டவசமாக எமது நாட்டிலே எதிர்நோக்கினோம். எமது சமூகத்தைச் சேர்ந்த சிறியதொரு கும்பலின் நடவடிக்கையின் விளைவாக எங்கள் சமூகத்தின் மீது சந்தேகப் பார்வை வளர்க்கப்பட்டது. அது மட்டுமல்ல தேவையற்ற அரசியல் ரீதியான சில நெருக்குவாரங்களுக்கும் முகம்கொடுத்தோம்.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments