Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அட்டாளைச்சேனை அன்-நம்ல் ஸதகா-ஸகாத் மன்றத்தின் உதவிப் பணிகள் ஆரம்பம்...!


அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள மக்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவும் பொருட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அண்மையில் ஒன்றுகூடலொன்று நடைபெற்றது.

அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தனர்.

அதன் பயனாக 'அட்டாளைச்சேனை அன்-நம்ல் ஸதகா ஸகாத் மன்றம்' என்ற பெயரில் அமைப்பொன்றை அங்குரார்ப்பணம் செய்து, உதவிப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இது பிரதேச மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளது.

ஓய்வுநிலை ஆசிரியர் எம்.ஏ.சி.ஸாகிர், ஆசிரியர் கே.எல்.எம்.முனாஸ் ஆகியோரின் இணை ஏற்பாட்டில், பிரதேச முக்கியஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக உதயமாகிய அன்-நம்ல் ஸதகா ஸகாத் மன்றத்திற்கு பொதுமக்கள் உதவி, ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.

உடைகள், பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள், அன்றாட வீட்டுப் பாவனைப் பொருட்கள், உணவு மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களை பொதுமக்கள் வழங்கி, அட்டாளைச்சேனை அன்-நம்ல் ஸதகா ஸகாத் மன்றத்திற்கு உதவ முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்றத்தின் பணிகளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு, அட்டாளைச்சேனை நூர் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஸாபிர், அட்டாளைச்சேனை ஜூம்மாப் பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜூனைதீன், நூர் பள்ளிவாயல் நிர்வாகிகள், பிரதேச முக்கியஸ்த்தர்கள், அன்-நம்ல் ஸதகா, ஸகாத் மன்றத்தின் நிர்வாகிகள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.

'ஒரு வீட்டுக்கு ஒரு புதிய பொருள்' எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு பிரதேச மக்கள் உடைகள், துணிகள், பாதணிகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவு மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களை பெருமளவில் அன்பளிப்புச் செய்துள்ளமை சிறப்பம்சமாகும். தொடர்ந்தும் உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாயல்கள் ஊடாக சேகரிக்கப்படும்

இப்பொருட்கள் திட்டமிடப்பட்ட ஒழுங்கமைப்பில் தேவையுடையவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

கொவிட் -19 வைரஸ் தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் பலரின் வாழ்க்கையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடும்பங்கள் அன்றாட உணவுக்கே சிரமப்படும் நிலையேற்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு நிறுவன ரீதியாக உதவுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை பரோபகாரிகள் சிறந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஸாபிர் கூறினார்.

ஓய்வுநிலை ஆசிரியர் எம்.ஏ.சி.ஸாகிர் கூறுகையில், "பலரது கஷ்டங்களை நாங்கள் நேரடியாக கண்டு மனம் உருகினோம். அத்துடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாது, நிறுவன ரீதியாக உதவுவதற்கு திட்டமிட்டு பணியில் இறங்கினோம். அதற்கு பூரண வரவேற்பு, உதவி கிடைத்துள்ளது. இப்பணி எதிர்காலத்தில் விருட்சமாக வியாபிக்கும்" என்றார்.

ஆசிரியர் கே.எல்.எம்.முனாஸ் கூறுகையில், "எந்தவிதமான எதிர்பார்ப்புக்களுமின்றி

இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவும் திட்டத்தை நாம்ஆரம்பித்துள்ளோம். எமது பணிகளுக்கு பிரதேச மக்களின் நிறைவான ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும்" என்றார்.

Post a Comment

0 Comments